

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்த மோதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த 8-ம் தேதி முதல் நடந்துவரும் தாக்குதலில் இதுவரை 137 பேர் பலியாகினர். இதில் 36 பேர் குழந்தைகள். 920 பேர் காயமடைந்துள்ளனர்.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 10,000 குடும்பங்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் தெளிவான நிலையான முடிவை இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் விரைந்து எடுக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு மே 8-ம் தேதி இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.