Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

புதிய விண்மீன் கூட்டத்தின் அற்புத புகைப்படம்: நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கியில் எடுக்கப்பட்டது

புதிய விண்மீன் கூட்டத்தின் அற்புத புகைப்படத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் ஆகியவை இணைந்து கடந்த 1990 ஏப்ரல் 24-ம் தேதி ஹப்பிள் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தின. கடந்த 31 ஆண்டுகளில் இந்த தொலைநோக்கி 48,000-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள், கோள்களை புகைப்படம் எடுத்துள்ளது. இதுவரை சுமார் 15 லட்சம் புகைப்படங்களை நாசாவுக்கு ஹப்பிள் அனுப்பியுள்ளது.

இந்த வரிசையில், பூமியில் இருந்து 130 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய விண்மீன் கூட்டத்தை ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்திருக்கிறது. அந்த அற்புதமான புகைப்படத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.

புகைப்படத்துடன் நாசா வெளியிட்டுள்ள விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் பால்வெளி அண்டம் மட்டுமே இருக்கிறது என்று விண்வெளி ஆய்வாளர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது பால்வெளி அண்டத்தை தாண்டி ஏராளமான விண்மீன் கூட்டங்களை நவீன தொலைநோக்கிகள் மூலம் நாம் கண்டுபிடித்துள்ளோம். நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி, ‘ஏபெல்3827' என்ற மிகப்பெரிய விண்மீன் கூட்டத்தை படம் பிடித்திருக்கிறது.

பிரபஞ்ச விண்மீன் கூட்டங்கள் குறித்த விரிவான ஆய்வுக்கு ஹப்பிளின் புகைப்படம் பேருதவியாக இருக்கும். இன்றுவரை புதிராக இருக்கும் இருள் பொருள் குறித்த ஆய்வுக்கும் இந்த புகைப்படம் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு நாசா தெரிவித்துள்ளது.

நாசா வெளியிட்ட புதிய விண்மீன் கூட்டத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.-நாசா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x