Published : 22 Dec 2015 10:13 AM
Last Updated : 22 Dec 2015 10:13 AM

உலக மசாலா: சலைன் பாட்டிலுடன் வலம்வரும் மக்கள்!

கம்போடியா கிராமங்களில் மருத்துவம் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லை. சலைன் பாட்டிலுடன் சர்வசாதாரணமாக மக்கள் வலம் வருவதைக் காண முடியும். காய்ச்சல் வந்த மகனின் கையில் சலைன் ஏறிக்கொண்டிருக்கிறது. சலைன் பாட்டிலைப் பிடித்தபடி அம்மாவும் பையனும் சாலையில் நடந்து செல்கிறார்கள். பைக்கில் பின்னால் உட்கார்ந்திருப்பவர் கையில் சலைன் ஏறிக்கொண்டிருக்கிறது. ஹாண்டில் பாரில் சலைன் பாட்டில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இப்படி வீடு, சாலைகள், பேருந்துகள், இரு சக்கர வாகனங்கள் என்று எங்கும் சலைன் பாட்டில்களுடன் சென்றுகொண்டிருக்கிறார்கள் மக்கள்.

சிறிய நோய் என்றாலும் ஓர் ஊசியும் ஒரு சலைன் பாட்டிலும் ஏற்ற வேண்டியது அவசியம் என்று மக்கள் கருதுகிறார்கள். ஊசியோ, சலைன் பாட்டிலோ வேண்டாம் என்று சொல்லும் மருத்துவர்களிடம் மீண்டும் அவர்கள் செல்வதில்லை. இதனால் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. அவர்கள் மக்கள் விருப்பப்படி ஓர் ஊசியும் ஒரு சலைன் பாட்டிலும் போட்டு விடுகிறார்கள். இந்த போலி மருத்துவர்கள் ஊசிகளைக் கூடச் சுத்தம் செய்வதில்லை. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

‘‘உடலுக்கு என்ன பிரச்சினை என்றாலும் ஒரு பாட்டில் சலைன் ஏற்றினால் சரியாகிவிடும் என்பது எங்கள் நம்பிக்கை மட்டுமல்ல, அதுதான் உண்மையும் கூட. நாங்கள் வசதி படைத்தவர்கள் அல்ல. மருத்துவமனையில் தங்கி ட்ரிப்ஸ் ஏற்றிக்கொள்ள இயலாது. அதனால் போகும் இடங்களுக்கு எல்லாம் சலைன் பாட்டிலுடன் சென்றுவிடுவோம். இதனால் எங்கள் வேலையும் பாதிக்காது. உடம்பும் குணமாகும்’’ என்கிறார் ஒரு கிராமத்துவாசி.

‘‘இங்கே உண்மையான மருத்துவர்கள் வேலை செய்வதுதான் கடினம். சலைன் என்பது வெறும் தண்ணீர்தான் என்றாலும் யாரும் நம்பமாட்டார்கள். எல்லா நோய்களுக்கும் சலைன் ஏற்றத் தேவை இல்லை என்பதையும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அரசாங்கமும் போலி மருத்துவர்கள் மீது அடிக்கடி நடவடிக்கை எடுக்கிறது. ஆனாலும் மக்களின் ஆதரவு போலிகளுக்கு இருப்பதால், அவர்களை முற்றிலுமாகத் தடுக்க முடியவில்லை. நோயாளிகளே தங்களுக்கு வயிற்றுவலி, காய்ச்சல் என்று சொல்லிவிட்டு, ஓர் ஊசியும் சலைனும் ஏற்றுங்கள் என்று சொல்லும்போது போலி மருத்துவர்களுக்கு பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. நோய் குணமாகிறதா, இல்லையா என்பதைப் பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. ஊசியைப் போட்டுக்கொண்டு தங்கள் வேலைகளைத் தொடர்கிறார்கள்’’ என்று வருத்தப்படுகிறார் ஹெல்த் சென்டரின் டைரக்டர் வோங் டு.

ஐயோ… இது மோசமான பிரச்சினையாக இருக்கிறதே…

இங்கிலாந்தில் வசிக்கும் எம்மா பட்டாரஸ்ஸி, தன் செல்ல நாய் பிரின்ஸின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு 5 லட்சம் ரூபாய்க்குப் பொருட்களை வாங்கியிருக்கிறார். பட்டாடைகள், சாண்டா க்ளாஸ் ஆடை, விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட மாலை என்று ஏராளமான பொருட்கள். பிரிட்டனில் ஒரு சராசரி மனிதனின் கிறிஸ்துமஸ் செலவுகள் 3 ஆயிரத்துக்குள் முடிந்துவிடுகின்றன. 24 வயது எம்மா,

‘‘இவனை நாய் என்று பார்த்தால் அநியாயமாகத் தோன்றலாம். எங்கள் குடும்பத்தில் ஒருவனாகப் பார்த்தால் நியாயமான செலவாகத் தெரியும். பிரின்ஸ் மூலம் ஏராளமான சந்தோஷங்களை அனுபவித்து வருகிறேன். அந்த அன்புக்கு முன்னால் இவை எல்லாம் ஒன்றுமே இல்லை. பிரின்ஸுக்காக ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் செலவு செய்கிறேன். காலை எழுந்ததும் பல் துலக்கி, மசாஜ் செய்து, குளித்த பிறகே சாப்பாடு. செயற்கை உரம் இல்லாத காய்கறிகள், கோழி இறைச்சி, வேக வைத்த முட்டை, பழக்கலவை, ஆட்டுப் பால், தேன், மசாலா தேநீர், இளநீர் போன்றவைதான் பிரின்ஸின் உணவுகள். இவனுக்கென்று அட்டகாசமான 200 ஆடைகள் இருக்கின்றன. என் சம்பாத்தியம் முழுவதையும் பிரின்ஸுக்குச் செலவு செய்தாலும் எனக்குத் திருப்தி வராது. என் திருமணத்தின்போது இதை விடச் சிறப்பாக பிரின்ஸைக் கவனித்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்’’ என்கிறார் எம்மா.

இதில் இல்லாத மக்களுக்கு எவ்வளவோ உதவியிருக்கலாம்… அதுதானே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எம்மா?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x