கரோனா பற்றிய இந்தியாவின் தவறான கணிப்புதான் கடும் நெருக்கடிக்குக் காரணம்: அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் கருத்து
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டதாக நினைத்து முன்கூட்டியே பொருளாதாரத்துக்கான கதவுகளைத் திறந்துவிட்டதுதான் இன்று கடுமையான நெருக்கடியில் தள்ளியிருக்கிறது என அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா 2-வது அலையில் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவப் பணியாளர்கள், ஆக்சிஜன், படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள் என அனைத்தும் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இந்தியாவின் நிலையைப் பார்த்து உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் மருத்துவம், கல்வி, தொழிலாளர் மற்றும் ஓய்வூதிய செனட் குழுவிடம், கரோனா வைஸ் பரவல் குறித்து அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி நேற்று விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''இந்தியாவில் இப்போது கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடிக்குக் காரணம் என்பது தவறான கணிப்புதான். கரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டதாக நினைத்துப் பொருளாதாரத்தைத் திறந்துவிட்டார்கள். ஆனால், என்ன நடந்தது, மீண்டும் கரோனா வைரஸ் 2-வது அலையில் சிக்கி மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறார்கள்.
நாம் இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், எந்தக் காரணத்தைக் கொண்டும் சூழலைத் தவறாக எடைபோடக் கூடாது. 2-வதாக, பொது சுகாதாரம், எதிர்காலப் பெருந்தொற்றுக்கான முன்தயாரிப்பு போன்றவற்றை அவசியமாக்க வேண்டும். குறிப்பாக மருத்துவக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் நாம் வலுவான மருத்துவக் கட்டமைப்பை வைத்திருந்ததால்தான் நம்மால் பெருந்தொற்றையும் கட்டுப்படுத்த முடிந்தது.
3-வதாக உலக அளவில் வரும் பெருந்தொற்றுக்கு உலக அளவில் ஒன்று சேர்ந்து உதவ வேண்டும், ஒட்டுமொத்த கவனம் செலுத்தி, பொறுப்பேற்று, ஒரு நாடு மட்டுமல்லாமல் பல நாடுகளும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். குறிப்பாக தடுப்பூசிகளை உலக அளவில் பரவலாக்க வேண்டும்.
இதுபோன்று வைரஸ்கள் தொடர்ந்து உலக அளவில் மீண்டும் பரவத் தொடங்கினால் அமெரிக்காவுக்கு மேலும் அச்சறுத்தலாகும். இந்தியாவில் உள்ள உருமாற்ற கரோனா வைரஸ் வித்தியாசமானதாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. இதுபோன்ற சில பாடங்களை நாம் இந்தியாவிடம் இருந்து எடுக்கலாம்.
கரோனாவிலிருந்து முழுமையாக ஒரு நாடு தப்பிக்க 70 முதல் 85 சதவீதம் தம் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதிகமான மக்களுக்கு தடுப்பூசி கிடைத்தாலே, கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்துவிடும்''.
இவ்வாறு அந்தோனி ஃபாஸி தெரிவித்தார்.
