Published : 10 May 2021 12:36 PM
Last Updated : 10 May 2021 12:36 PM

கரோனா தடுப்பூசிகளை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தால் இன்னும் பல அலைகளால் இந்தியா பாதிக்கப்படக் கூடும்: ஃபிட்ச் எச்சரிக்கை

கரோனா தடுப்பூசிகளை மெதுவாகச் செலுத்திக் கொண்டிருந்தால், இந்தியா எதிர்காலத்தில் அடுத்தடுத்த கரோனா அலைகளால் பாதிக்கப்படக் கூடும் என்று தர மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இன்று (திங்கட்கிழமை) ஃபிட்ச் வெளியிட்ட அறிக்கையில், “ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான இந்தியா, கரோனா வைரஸை எதிர்த்துப் போராடி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தொடர்ந்து ஊரடங்கை அதிகப்படுத்தினால் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். இந்தியாவில் கரோனா வைரஸுக்கான தடுப்பூசி மெதுவாகப் போடப்பட்டு வந்தால் எதிர்காலத்தில் கரோனாவின் அடுத்தடுத்த அலைகளால் பாதிக்கப்படக் கூடும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக, ''இந்தியாவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதுதான் தீர்வு. உலகிலேயே அதிகமான தடுப்பூசி தயாரிக்கும் நாடு இந்தியாதான். இந்தியாவில் ஏராளமான வளங்கள் இருக்கின்றன. அதை வைத்து தயாரிக்க வேண்டும்'' என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரத்தை அடைந்துள்ளது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் ஜனவரியில் தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசிப் பணி, தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

நாள் ஒன்றுக்கு 50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சூழலில், இந்தியாவில் 20 லட்சத்துக்கும் குறைவாகத்தான் நாள்தோறும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 17 கோடிக்கும் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 2%தான்.

இந்தியாவில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x