

பூமி மற்றும் நிலவு ஆகியவற்றின் வயது இதுவரை கணிக்கப்பட்டதை விட கூடுதலாக 6 கோடி ஆண்டுகள் இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்ஸ், லோரைன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவி அறிவியலாளர்கள், ஐசோடோபிக் சமிக்ஞைகள் மூலம் ஆய்வு செய்ததில் பூமி மற்றும் நிலவின் வயதை குறைவாகக் கணித்தது தெரியவந்தது.
சூரியக் குடும்பம் உருவான 10 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமி உருவாகியிருக்க வேண்டும் என அறிவியலாளர்கள் கருதி வந்தனர். ஆனால், புதிய ஆய்வின் படி சூரியக் குடும்பம் தோன்றிய 4 கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமி உருப்பெற்றிருக்க வேண்டும் என தற்போது தெரியவந்துள்ளது.
ஆய்வாளர்கள் கிலாமே அவிஸ் மற்றும் பெர்னாட் மார்டி ஆகியோர் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் கிடைத்த படிகக்கல்லில் (குவார்ட்ஸ்) இருந்த ஜெனான் வாயுவை ஆய்வு செய்தனர். அவற்றின் வயது முறையே 340 மற்றும் 270 கோடி ஆண்டுகள் எனத் தெரிய வந்தது.
அந்தப் படிகக்கல்லில் இருந்த ஜெனான் வாயுவின் ஐஸோடோப்பிக் விகிதாச் சாரத்தை தற்போதைய நிலையு டன் ஒப்பிட்டு வயதைக் கண்டறிந்தனர். இதன் மூலம் புவியின் வயது, தற்போது கருதப்படுவதை விட அதிகம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
இது தொடர்பாக அவிஸ் கூறுகையில், “பூமி எப்போது உருவானது என்பதைத் துல்லியமாகக் கூற முடியாது. தற்போதைய ஆய்வின்படி, இதுவரை கருதப்பட்டுவந்த பூமியின் வயதை விட, 6 கோடி ஆண்டுகள் அதிகம் எனத் தெரிய வந்துள்ளது” என்றார்.