Published : 10 May 2021 04:01 AM
Last Updated : 10 May 2021 04:01 AM

10-க்கும் மேற்பட்ட பின்தங்கிய  நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை: உலக சுகாதார அமைப்பு கவலை

முன்னேறிய நாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 10-க் கும் மேற்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) கவலை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு முன்னேறிய நாடுகள் தடுப்பூசியை கண்டறிந்து அதை மக்களுக்குச் செலுத்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை வழங்கி வருகின்றன.
ஆனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகள் இன்னும் தடுப்பூசியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.குறிப்பாக ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. அங்கு ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் அவல நிலை உள்ளது.

இதுகுறித்து வட மத்திய ஆப்பிரிக்கா விலுள்ள சாட் நாட்டைச் சேர்ந்த ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் அவுமைமா டிஜர்மா கூறும்போது, “இங்கு கரோனா வைரஸ் சிகிச்சை மையத்தில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு கூட வைரஸ் தடுப்பூசி கிடைக்கவில்லை. மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாக இது உள்ளது.

வளமான நாடுகள் தங்களுக்காக கரோனா தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு செலுத்தி வருகின்றன. ஆனால் சாட் போன்ற ஏழை நாடுகளுக்கு இது எட்டாக் கனியாகவே உள்ளது.

ஆப்பிரிக்காவில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி இதுவரை கிடைக்கவில்லை. அதில் சாட் நாடும் ஒன்று. பெரும்பாலான முன்னேறிய நாடுகளில் சுகா தாரத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது என்ற செய்தி கிடைத்துள்ளது. இது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. எங்களைப் போன்ற சிறிய ஏழை நாடுகளில் பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்த கரோனா தடுப்பூசியைக் கொடுக்கலாமே.

இது தொடர்பாக டபிள்யூஎச்ஓ நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரைப் பணயம் வைத்து பணி புரிந்து மக்களைக் காப்பாற்றி வரும் டாக்டர்கள், நர்ஸ்களுக்கு தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்” என்றார்.

இந்நிலையில் மிகவும் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்று டபிள்யூஎச்ஓ தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியைத் தராவிட்டால் அந்த நாடுகள், மேலும் பின்தங்கிவிடும். கரோனாவால் பாதிக்கப்படுவது அங்கு அதிகரித்து விடும் என்று டபிள்யூஎச்ஓ எச்சரிக்கை செய்துள்ளது.

சாட் நாட்டில் கரோனா வைரஸ் பரவியது முதல் இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு மேலும் 4,835 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x