Published : 10 May 2021 03:58 AM
Last Updated : 10 May 2021 03:58 AM

சீன ராக்கெட்டின் 18 டன் பாகம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது: பூமிக்கு வந்த ஆபத்து நீங்கியது

பெய்ஜிங்

சீன ராக்கெட்டின் 18 டன் எடை கொண்ட பெரிய பாகம், நேற்று காலையில் இந்திய பெருங்கடலில் விழுந்தது. இதனால் பூமிக்கு வந்த ஆபத்து நீங்கியது.

சீனா விண்ணில் விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக ‘லாங் மார்ச் 5பி-யவோ-2’ என்ற ராக்கெட்டை ஏப்ரல் 29-ம் தேதி விண்ணில் செலுத்தியது. திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்த அந்த ராக்கெட், தனது பணியை முடித்து விட்டது. எனினும், அதன் பாகங்கள் பூமியை நோக்கி விழ தொடங்கின. அவற்றில் 18 டன் எடை கொண்ட மிகப்பெரிய பாகம் பூமியில் விழும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அச்சம் ஏற்பட்டது.

அது பூமியின் எந்த பாகத்தில் விழும், எப்படிப்பட்ட சேதாரத்தை உருவாக்கும் என்று உலகின் பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய தொடங்கினர். இதற்கிடையில், பூமிக்குள் நுழையும்போது, அந்த ராக்கெட் பாகத்தை சுட்டு வீழ்த்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், சீன ராக்கெட்டின் 18 டன் எடை கொண்ட அந்த மிகப்பெரிய பாகம் இந்திய பெருங்கடலில் மாலித் தீவுக்கருகில் விழுந்தது. இதை சீன அரசின் தொலைக்காட்சி நேற்று உறுதி செய்தது.

இதுகுறித்து பெய்ஜிங்கில் சீன விண்வெளி ஆய்வு மைய அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘லாங் மார்ச் ராக்கெட்டின் பாகம் பூமியில் விழுமோ என்று சிறிது அச்சம் நிலவியது. எனினும். அந்தப் பாகத்தை கண்காணித்து வந்தபோது, இன்று (நேற்று) காலை 10.24 மணிக்கு இந்தியப் பெருங்கடலில் அது விழுந்துவிட்டது. ராக்கெட்டின் 18 டன் எடை கொண்ட பாகம் பூமிக்குள் நுழைந்த போதே அதன் பாகம் எரிந்துவிட்டது. மீதமிருந்த பகுதிதான் கடலில் விழுந்தது’’ என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக நிபுணர்கள் சிலர், ‘‘பூமியின் 70 சதவீத பாகம் தண்ணீரால் நிரம்பி இருக்கிறது. அதனால், சீன ராக்கெட்டின் பாகம் கடலில்தான் விழும்’’ என்று கூறியிருந்தனர். அதன்படி ராக்கெட்டின் பாகம் கடலில் விழுந்துள்ளது.

இதற்கிடையில் சீனாவின் அலட்சியத்தால்தான் இதுபோன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு சீனாவின் மற்றொரு லாங் மார்ச் ராக்கெட்டின் பாகம் ஐவரி கோஸ்ட் கிராமத்தில் விழுந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், பல வீடுகள் நாசமடைந்தன. எனவே, இனிமேலாவது இதுபோன்ற அபாயங்கள் நேர்வதை தடுக்க, லாங் மார்ச் ராக்கெட்டின் மறு வடிவமைப்பு செய்ய வேண்டும் பல நாட்டு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x