இந்தியாவில் அதிவேகமாக கரோனா பரவுவது ஏன்? உலக சுகாதார அமைப்பு விளக்கம்
இந்தியாவில் தற்போது தாக்கத்தை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் வகையானது வேகமாகப் பரவக் கூடியது என்றும் தடுப்பூசிப் பலன்களைக் கூட தள்ளிப்போடக்கூடியது என்றும் உலக சுகாதார மைய தலைமை விஞ்ஞானி தெரிவித்திருக்கிறார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த உலக சுகாதார மைய தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:
இந்தியாவில் முதன்முதலாக சனிக்கிழமை (மே 8) கரோனா பலி 4000ஐ கடந்திருக்கிறது. கோவிட் 19 வைரஸின் B.1.617 என்ற உருமாறிய ரகமானது முதன்முறையாக கடந்த அக்டோபரில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இப்போது நாட்டில் ஏற்பட்டுவரும் மிக மோசமான கரோனா பரவலுக்கு இந்த வகை உருமாறிய வைரஸே காரணம்.
ஒரிஜினல் கரோனா வைரஸைக் காட்டிலும் இந்தவகை வைரஸ் பரவும் தன்மை அதிகம் கொண்டது. உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதும்கூட. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் இந்த ரக உருமாறிய வைரஸை அச்சத்துடன் காண்கின்றனர். தடுப்பூசி உருவாக்கும் ஆண்ட்டிபாடிக்களுடன் கூட இவை போராடக்கூடியவை என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
இருப்பினும் இந்தியாவின் மிகக்கோரமான இரண்டாவது அலைக்கு முழுக்க முழுக்க இந்த உருமாறிய வைரஸை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. இந்தியர்கள் தற்காப்பு வழிமுறைகளை முற்றிலுமாக துறந்தனர். சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை. பெரிய பெரிய கூட்டங்கள் அரங்கேறின. மாஸ்குகளை சம்பிரதாயத்தை மூக்குக்கு கீழே அணிந்தனர். இந்த நேரத்தில் வைரஸ் சத்தமில்லாமல் பரவத் தொடங்கியது. இன்று கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது.
ஆரம்பநிலையிலேயே கரோனா பரவலைத் தடுக்காததால் இன்றைக்கு விண்ணை நோக்கி உயர்ந்துவருகிறது. இந்தியாவில், இந்தச் சூழலில் கரோனா பரவலை இப்போதைக்கு கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். அதிக மெனக்கிடல்கள் தேவை.
130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். 70 முதல் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிக்கு சில மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
