

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 14 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் தம்பதியினர் ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2-ம் தேதி கலிபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் ஒரு தம்பதியினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில் 14 பேர் உயிரிழந்தனர். 21 பேர் பலத்த காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய தம்பதியினர் காரில் தப்பிச் சென்றனர். 4 மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு தம்பதியினரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய வர்கள் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சையது ரிஸ்வான் பரூக், அவரது மனைவி தஸ்பீன் மாலிக் என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் ஐ.எஸ். ஆதரவு தீவிரவாதிகள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஐ.எஸ். மூத்த தளபதி அல்ஹார் திஷ் ஜாருல்லா தனது ட்விட்டர் பதிவில், சிரியா, இராக்கில் அமெரிக்கா குண்டுகளை வீசுகிறது, அதற்குப் பதிலடியாக எங்களது சிறப்பு ஏஜெண்டுகள் அமெரிக்கர்களை சுட்டுக் கொன் றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.