இந்தியாவிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்குத் தடை: உடனடியாக அமலுக்கு வருவதாக இலங்கை அரசு அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் உச்சகட்டத்தை அடைந்துள்ளதை அடுத்து, இந்தியாவிலிருந்து பயணிகள் வரத் தடை விதித்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகரிப்பைப் பார்த்து ஏற்கெனவே பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து பயணிகள் வரத் தடை விதித்துள்ளன. அத்தோடு தற்போது இலங்கையும் சேர்ந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், “இலங்கை சுகாதாரத் துறையின் அறிவுரைகளின்படி, இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் பின் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்தது. இதில் பெரும்பாலும் பிரிட்டனைச் சேர்ந்த உருமாற்றம் அடைந்த வைரஸ்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால், பரவல் வேகம் அதிகரித்து வருகிறது.

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னா ரணதுங்கா கூறுகையில், “ வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும், இந்தியாவில் வசிக்கும் இலங்கை தொழிலாளர்கள் தாயகம் திரும்பினால் அவர்களை அனுமதிக்க அதிபர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு கடற்கரை, வடகிழக்கு கடற்கரையில் இந்திய மீனவர்கள் வருவதையும், மீன் பிடிப்பதையும் தடுக்கத் தீவிர நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் எடுத்துள்ளனர். கரோனா தொற்றுள்ள இந்திய மீனவர்கள் மூலம் இலங்கை மக்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதைத் தடுக்க ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in