

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பின் அறிவுக்கூர்மை தம்மை வியக்க வைப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். அதோடு அவரது ரஷ்ய ஆதரவு கொள்கையையும் மறைமுகமாக பாராட்டும் வகையில் அவர் பேசியுள்ளார்.
மாஸ்கோவில் நடந்த வருடாந்திர பத்திரிகையாளர் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் பேசினார். சுமார் 2 மணி நேரம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து அவர் பேசினார்.
அப்போது அதிபர் வேட்பாளர் டிரம்ப் குறித்து கேட்டபோது, "அதிபர் வேட்பாளர் டிரம்ப் அறிவுக்கூர்மை கொண்டவர். அவரது திறமையை யாராலும் எடைபோட முடியாது.
அதற்கான உரிமை அமெரிக்க வாக்காளர்களுக்கு மட்டும்தான் உள்ளது. ஆனால் அவர் அமெரிக்க தேர்தலில் நிற்க தகுதி வாய்ந்தவர்.
அவர் பேசும் விதம் குறித்தும் மக்கள் மத்தியில் நீடித்து நிற்க அவர் கையாளும் முறை குறித்தும் ரஷ்ய தரப்பிலிருந்து கூற எதுவும் இல்லை. அது நமது வேலையும் இல்லை. ஆனால் அவரது கொள்கையை நான் வரவேற்கிறேன்" என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலை கண்காணிக்க வேண்டும்
தற்போதைய அதிபர் ஒபாமா குறித்து கூறியபோது, "ஒபாமா தன்னை நிலைநாட்டு பல வழிகளை கையாண்டுவிட்டார். அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவரை நாம் வரவேற்போம். அமெரிக்காவுடனான ரஷ்யாவின் உறவை வளர்க்க நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் ரஷ்ய அதிபர் தேர்தலை வெளியிலிருந்து கண்காணித்தால் அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது" என்றார்.
அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் அதிரடியாக கூறிவருகிறார். இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் அதனால் பயங்கரவாதத்தை தடுக்க முடியும் என்ற ஆலோசனையை குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரும் அதிபர் பதவி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் முன்வைத்தார். இதனால் இவர் சர்வதேச அளவில் ஒரு தரப்பு எதிர்ப்பையும் ஆதரவையும் சமீபத்தில் சம்பாதித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரும் ரியாலிடி நிகழ்ச்சியின் மூலம் வெளியுலகுக்கு பிரபலமானவருமான டிரம்ப்பின் பேச்சின் விளைவு அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தெரியவரும் என்பதால் சர்வதேச அரசியல் நோக்கர்கள் இந்த விவகாரத்தை ஆர்வத்துடன் நோக்குகின்றனர்.