

கரோனா பரவல் தொடர்ந்து நீடிப்பதால் இந்தியா மீதான பயணத் தடையை நீட்டித்து ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,57,229 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,449 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இந்தியா மீதான பயணத் தடையை ஐக்கிய அரபு அமீரகம் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியுறவுத் துறை தரப்பில், ''இந்தியப் பயணிகள் அமீரகம் வருவதற்கான தடை நீட்டிக்கப்படுகிறது. ஆனால், அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீதான தடை எந்தத் தேதிவரை நீடிக்கும் என்ற தகவலை அமீரகம் தரப்பில் கூறப்படவில்லை.
இந்தியாவில் இரண்டு வாரங்களாக கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடி பேர் குணமடைந்த நிலையில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.