

‘மிஸ் இராக்’ அழகியை கடத்திச் செல்வோம் என்று ஐ.எஸ். தீவிர வாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இராக்கில் கடந்த 1972-ம் ஆண்டில் இராக்கில் அழகிப் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி அங்கு ‘மிஸ் இராக் அழகிப் போட்டி’ நடை பெற்றது.
இந்தப் போட்டியின் தகுதிச் சுற்று தொடங்கியபோது போட்டியை நடத்தக்கூடாது என்று ஐ.எஸ். தீவிர வாதிகள் மிரட்டல் விடுத்தனர். இதனால் பாஸ்ரா நகரில் நடைபெற வேண்டிய போட்டி தலைநகர் பாக்தாத்துக்கு மாற்றப் பட்டது.
போட்டியில் பங்கேற்ற இளம் பெண்களை கொலை செய்வோம் என்றும் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். இதனால் 2 பெண்கள் போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் நீச்சல் உடை போட்டியும் நேரடி ஒளிபரப்பும்கூட ரத்து செய்யப்பட்டது.
பல்வேறு மிரட்டல்கள், விமர்சனங்களை தாண்டி கடந்த 19-ம் தேதி பாக்தாதில் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் கிர்குக் நகரைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி சாய்மா குவாசிம் ‘மிஸ் இராக்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணை கடத்துவோம் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தீவிரவாதி, ஐ.எஸ். அமைப்பில் சாய்மா குவாசிம் இணைந்து முஸ்லிம் பாரம்பரியபடி வாழ வேண்டும், இல்லையெனில் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்வோம் என்று மிரட்டல் விடுத் துள்ளான்.
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இதுபோன்ற மிரட்டல் தொலைபேசிகள் அடிக்கடி வருகின்றன. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டிருப்பதாக இராக் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.