

இராக் நாட்டில் சன்னி முஸ்லிம் களின் படை முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியுள்ளதால், ஷியா முஸ்லிம்களால் நடத்தப்படும் பிரதமர் நூரி அல் மாலிக்கி தலைமையிலான அரசு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
இராக் நாட்டில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது. சன்னி பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்க ஆதரவு பெற்ற ஷியா பிரிவு அரசு ஆட்சி செய்து வருகிறது.
இந்த அரசை எதிர்த்து சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த “இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அன்ட் தி லெவன்ட்' (ஐஎஸ்ஐஎல்)” என்ற அமைப்பு போரிட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு ஆதரவாக சதாம் உசேன் ஆதரவாளர்கள் மற்றும் இதர சன்னி பிரிவினர் களமிறங்கியுள்ளனர். அல்கொய்தாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎல் படையினர் நாட்டின் 2-வது பெரிய நகரான மொசுல் உள்பட முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ளனர். மொசுல் நகரில், ஷாரியா சட்டத்தை அமல்படுத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎல் படைகள் தலைநகரான பாக்தாதுக்கு மிக அருகில் வந்துவிட்டன. இராக்கிலிருந்த அமெரிக்கப் படைகள் 2011-ம் ஆண்டு வெளியேறிவிட்டன.
இதனால், தற்போதுள்ள நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கிர்குக் நகரத்துக்குள் நுழைந்துள்ள குர்திஸ் பாதுகாப்புப் படை, அங்குள்ள விமானப்படைத் தளத்தின் முக்கியப் பொறுப்பு களைக் கைப்பற்றி யுள்ளது. ராணுவம் அங்கிருந்து பின்வாங்கி விட்டது.
நாடு திரும்பிய அமெரிக்கர்கள்
வடக்கு பாக்தாதிலுள்ள விமான தளம் மூலம் மூன்று விமானங்களில் அமெரிக்கர்கள் திரும்ப அழைக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனி, இராக்கிலுள்ள தனது நாட்டவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது.
ஆளில்லா விமான தாக்குதல்?
இராக்குக்கு அதிக உதவி தேவைப்படுகிறது என அமெ ரிக் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அதேசமயம் எவ்வகையான உதவிகளை அமெரிக்கா செய்யவுள்ளது என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆளில்லா விமானத் தாக்கு தல்களை நடத்த அமெரிக்கா முன்வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசரநிலை பிரகடனம்?
அவசரநிலையை பிரகடனம் செய்யும் படி நாடாளுமன்றத்துக்கு அதிபர் நூரி அல் மாலிக்கி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், வியாழக்கிழமை கூடிய நாடாளுமன்றத்தில் போதிய கோரம் இல்லாததால் இது சாத்தியமாகவில்லை.
சதாம் உசேனின் சொந்த நகரான திக்ரித்தைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள், சதாம் உசேன் மற்றும் அவரது துணைத் தளபதி இஸ்ஸாத் இப்ராஹிம் ஆகியோரின் உருவப் படங்களை ஏந்தி கோஷமிட்டனர்.
பாக்தாத்துக்குள் கிளர்ச்சி யாளர்கள் எப்போது வேண்டு மானாலும் நுழையலாம் என்பதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட் டுள்ளது. குடியிருப்புவாசிகள் அத்தியாவசியப் பொருள்களை இருப்பு வைத்துள்ளனர். ராணுவத்தில் சேரும்படி இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை ஏற்று, ஏராளமான இளைஞர்கள் ராணுவ ஆட்சேர்ப்பு மையத்தின் முன் குவிந்துள்ளனர்.
ஏ.கே. 47, ராக்கெட்டுகள், வெடி குண்டுகள் உள்ளிட்ட 4 லட்சத்துக்கும் அதிகமான ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த 2 ஆயுதக் கிடங்குகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள் ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.