

ரஷ்ய எல்லைப் பகுதியை நெருங்கிய துருக்கி கப்பலை அந்த நாட்டு கடற்படை விரட்டியடித்தது. இதனால் இருநாடுகளிடையே பதற்றம் எழுந்துள்ளது.
சிரியா அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது. கடந்த நவம்பர் 24-ம் தேதி சிரியா எல்லையில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில் ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததால் ரஷ்ய விமானம் சுடப்பட்டது என்று துருக்கி அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் சிரியா எல்லையில்தான் விமானம் பறந்தது என்று ரஷ்யா வாதிட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றம் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மோதலை தவிர்க்க சிரியா எல்லையில் துருக்கி போர் விமானங்கள் ரோந்து பணி மேற்கொள்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பதற்றம்
ரஷ்யாவின் கிரீமியா பகுதியை ஒட்டி அமைந்துள்ள கருங்கடலில் ரஷ்யா எண்ணெய் துரப்பன பணி மேற்கொண்டு வருகிறது. அந்தப் பகுதிக்கு அருகில் துருக்கி சரக்கு கப்பல் ஒன்று நேற்றுமுன்தினம் நெருங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த கப்பலை எச்சரிக்கை செய்யும் வகையில் ரஷ்ய கடலோர காவல் படையினர் சில குண்டுகளை கடலில் வீசினர். ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் துருக்கி கப்பல் தொடர்ந்து முன்னேறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரஷ்ய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல் துருக்கி சரக்கு கப்பலை இடைமறித்து விரட்டியது.
இதனிடையே சம்பவ பகுதிக்கு ரஷ்ய கடற்படை போர்க்கப்பலும் விரைந்து வந்தது. இதையடுத்து துருக்கி கப்பல் வேறு பாதையில் விலகிச் சென்றது.
சர்வதேச கடல் எல்லையில்தான் தங்கள் கப்பல் சென்றதாக துருக்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்ததால் துருக்கி கப்பல் விரட்டப்பட்டது என்று ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தால் இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றம் எழுந்துள்ளது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டாவில் துருக்கியும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.