

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு, பிரான்ஸில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் பிரான்ஸுக்கு வந்த ஒருவருக்கு இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர், வடக்கு இத்தாலியில், இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது பிரான்ஸிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ்
பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வகை கரோனா வைரஸ்கள் தொற்றை அதிவேகமாகப் பரப்பும் தன்மை உடையவை.
இந்தியாவில் இரண்டு வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் தம் நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. அமீரகம், ஈரான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. வங்கதேசமும் இந்தியாவுடனான எல்லையை மூடியுள்ளது.
உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.