

இந்தியாவில் கரோனா வைரஸின் 2-ம் அலை தீவிரமாகி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இந்திய-அமெரிக்க டாக்டர்கள், இந்தியாவிலுள்ள கரோனா நோயாளிகளுக்கு உதவ முன்வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அமெரிக்கா சென்று பணியாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள பல்வேறு இந்திய-அமெரிக்க மருத்துவர்கள் ஒருகுழுவாக இணைந்து நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கத் தயாராகியுள்ளனர்.
டாக்டர் அவினாஷ் குப்தா தலைமையிலான டாக்டர்கள் குழு இதற்கான ஏற்பாடுகளை செ்ய்து வருகிறது. இவர் வட அமெரிக்க பிஹார், ஜார்க்கண்ட் டாக்டர்கள் சங்கத்தின் (பிஜேஏஎன்ஏ) தலைவர் ஆவார்.
கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆலோசனையை வழங்குவதற்கு டெலிமெடிசின் வசதியை அவர்கள் பயன்படுத்தவுள்ளனர்.
இவரைப் போலவே அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் பல்வேறு இந்திய-அமெரிக்க மருத்துவர்களும் இன்டர்நெட் மூலமாகவும், செல்போன் செயலிகள் மூலமாகவும் ஆலோசனை வழங்கத் தயார் என்று அறிவித்துள்ளனர்.