

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசி மருந்துகளின் முதல் தொகுப்பு மே 1-ம் தேதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழப் போரின் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வரு கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு போதுமான ஆக்சிஜனும், மருந்துகளும் இல்லாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தான ‘ஸ்புட்னிக் வி' தடுப்பூசிகளின் முதல் தொகுப்பு இந்தியாவுக்கு மே 1-ம் தேதி அனுப்பி வைக்கப்படும் என அந்நாட்டின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரேவ் தெரிவித்துள்ளார். எனினும், முதல் தொகுப்பில் எத்தனை மருந்துகள் அனுப்பி வைக்கப்படும், இந்த மருந்துகள் இந்தியாவில் எங்கு தயாரிக்கப்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.
ஏற்கெனவே இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் ரஷ்யா வின் நேரடி முதலீட்டு நிதியம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதில், ஆண்டுக்கு 85 கோடி டோஸ் 'ஸ்புட்னிக் வி' மருந்துகளை உற்பத்தி செய்து கொள்ள அனுமதி அளிக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.