மோடியுடன் ஒபாமா தொலைபேசி பேச்சு: வலுவான பருவநிலை ஒப்பந்தத்துக்கு உறுதி

மோடியுடன் ஒபாமா தொலைபேசி பேச்சு: வலுவான பருவநிலை ஒப்பந்தத்துக்கு உறுதி
Updated on
1 min read

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பருவநிலை மாறுபாடு தொடர்பான உச்சி மாநாடு நடைபெற்று வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, பருவநிலை மாறுபாடு தொடர்பாக வலுவான ஒப்பந்தம் ஏற்படுத்த இரு தலைவர்களும் உறுதி ஏற்றுக்கொண்டனர்.

கடந்த 30-ம் தேதி தொடங்கிய பாரிஸ் உச்சி மாநாடு வரும் வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. உடன்பாடு எட்டுவதற்கு குறுகிய கால அளவே இருக்கும் நிலையில், உடன்பாட்டின் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.

இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி நேற்று சந்தித்து பேசினார். குறிக்கோளுடன் கூடிய நியாயமான உடன்பாட்டை இந்தியா வலியுறுத்தி வரும் வேளையில், இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக ஜான் கெர்ரி கூறினார்.

இதையடுத்து பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் பேசினார். அப்போது இம்மாநாடு வெற்றிகரமான முடிவை எட்டவும், பருவநிலை மாநாடு தொடர்பாக வலுவான ஒப்பந்தம் ஏற்படவும் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் உறுதியேற்றுக்கொண்டனர்.

முன்னதாக பிரேசில் அதிபருடன் ஒபாமா தொலைபேசியில் பேசினார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறும்போது, “மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துகளை அதிபர் ஒபாமா கூர்ந்து கவனித்து வருகிறார். உலகத் தலைவர்கள் பலருடனும் ஒபாமா கருத்துகளை கேட்டறிகிறார். பாரிஸ் மாநாடு வெற்றி பெறும் என்பதில் அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in