

இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் விரைவில் விடுவிக்கப்படும் என்று அந்த நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அப்போது தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்த ராணுவம் பெரும்பாலான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. போர் முடிவுக்கு வந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழர் பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து முகாமிட் டுள்ளது.
ராணுவத்தை வெளியேற்ற வேண்டும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் நேற்று கூறியதாவது:
ராணுவ வசம் உள்ள நிலங்களை விடுவிப்பது தொடர்பாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அவற்றை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.