

யேமனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு ராணுவ சோதனைச் சாவடி மீது துப்பாக்கி ஏந்திய அல் காய்தா தீவிரவாதிகள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதில் 14 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
யேமனில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஷப்வா மாகாணத்தில் உள்ள பேஹன் கிராமம் அருகே உள்ள ஒரு சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
தானியங்கி துப்பாக்கியைக் கொண்டு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 14 ராணுவ வீரர்கள் மற்றும் ஒருவர் உட்பட மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் பல வீரர்கள்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் சனாவுக்கு கிழக்கே வதி அபிதா பகுதியில், ஆளில்லா விமானம் மூலம் புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அல்-காய்தா தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏமன் பகுதியில் ஆளில்லா விமானங்களை அமெரிக்கா மட்டுமே இயக்கி வருகிறது. ஆனால், இதுபோன்ற தாக்குதல்களை அமெரிக்க அதிகாரிகள் வெளிப்படையாக ஒப்புக் கொள்வதில்லை.