Published : 26 Apr 2021 08:28 AM
Last Updated : 26 Apr 2021 08:28 AM

இந்தியாவுக்கு தடுப்பூசி மூல மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்: அமெரிக்கா உறுதி

இந்தியாவுக்கு தடுப்பூசி மூல மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது.

அன்றாட கரோனா பாதிப்பு 3.5 லட்சம், நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்போர் 27 லட்சம் என கரோனா இரண்டாவது அலையில் இந்தியா சிக்கித் திணறும் நிலையில் ஆக்சிஜன், பிபிஇ கிட், தடுப்பூசி பற்றாக்குறை என சிகிச்சைக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு தடுப்பூசி மூல மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் ‘‘இந்தியாவின் கரோனா நிலவரம் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. ஆகையால் கரோனா பரிசோதனை உபகரணங்கள், வென்டிலேட்டர்கள், பிபிஇ கவச உடைகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு உடனடியாகக் கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்யும். இந்தியாவின் நெருக்கடி காலத்தில் கைகொடுக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அதேபோல், ஆக்சிஜன் தயாரிப்பு உபகரணங்களையும் அனுப்பிவைக்கவுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதேவேளையில் கோவிஷீல்டு தயாரிப்பதற்கான மருந்து மூலப் பொருட்களை சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்துக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை அனுப்பி இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x