இலங்கையிலும் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ்: காற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருக்கும்

இலங்கையிலும் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ்: காற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருக்கும்

Published on

இலங்கையில் வீரியமிக்க புதியவகை கரோனா வைரஸ் பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளைப் போல இலங்கையிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்தசில வாரங்களாக அதிகரித்து வருகிறது. அங்கு 99,691பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 638 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கரோனா பரவலை தடுக்க, அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும், முகக் கவசம்கட்டாயம் உள்ளிட்ட பல்வேறுகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து இலங்கையின் ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறை தலைவர் நீலிகா மாலவிஜே கூறும்போது, “இலங்கையில் வீரியமிக்க புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களைவிட அதிவேகமாக பரவும் தன்மை கொண்டதாக இந்த புதிய வைரஸ் விளங்குகிறது. காற்றில் சுமார் 1 மணி நேரம் வரை இது உயிருடன் இருக்கும்” என்றார்.

கடந்த வாரம் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன் பிறகு புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த 2, 3 வாரங்களில்3-வது அலையாக மாறவும் வாய்ப்பு இருப்பதாக பொது சுகாதார ஆய்வாளர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இலங்கை சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் அசிலா குணவர்தன கூறும்போது, “கரோனா முதல் அலையின்போது அறிகுறிகள் குறைவாக இருந்தன. இப்போது கரோனா பாதித்தவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் செலுத்த வேண்டியிருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் போதுமான அளவில் உள்ளன” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in