

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை அனுப்பி இந்தியர்களுக்கு உதவ வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு அமெரிக்கவாழ் இந்தியர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
ஆளும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள், எழுத்தாளர்கள் எனப்பலரும் இந்தியாவுக்கு உதவ வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை கோரத்தாண்டவமாடி வருகிறது. நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் மக்கள் சந்தித்துவரும் இக்கட்டான சூழலைப் பார்த்து சீனா, பாகிஸ்தான், பிரிட்டன் நாடுகள் உதவுவதாக ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவிலும் இந்தியாவுக்கு உதவ அதிபர் ஜோ பிடனுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. அமெரிக்க இந்தியரும் எம்.பி.யுமான ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறுகையில் “இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மக்களுக்கு இந்த நேரத்தில் உதவி அவசியம்.
நம்முடைய சேமிப்புக் கிடங்குகளி்ல் அமைதியாக தடுப்பூசிகளை வைத்திருக்க முடியாது. அதை தேவையுள்ளவர்களுக்கு வழங்கி உயிரைக் காக்க வேண்டும். தற்போது அமெரிக்க இருப்பில் 4 கோடி அஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகள் இருப்பு உள்ளன. இதை நாம் பயன்படுத்தவில்லை.
சர்வதேச அளவில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும், மக்களின் உடல்நிலையைக் காத்து, சர்வதேச பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு இந்தியர்களுக்கு தடுப்பூசியை வழங்கிட வேண்டும்.
ஆதலால், கோடிக்கணக்கில் நம்மிடம் இருக்கும் அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை உடனடியாக இந்தியா, அர்ஜென்டினா, உள்ளி்ட்ட தேவைப்படும் நாடுகளுக்கு வழங்க அதிபர் பிடன் நிர்வாகம் முன்வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்
ப்ரூக்கிங் இன்ஸ்ட்டியூட்டைச் சேர்ந்த தான்வி மதன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவுக்கு உதவ பாகிஸ்தான் பிரதமர், ஈரான் பிரதமரும் முன்வந்துவிட்டார்கள். ரஷ்யா, சீனாவும் ஆதரவு வழங்கிவிட்டார்கள். அமெரிக்கா இதுவரை ஏதும் பேசவி்ல்லை.இனியும் பேசாமல் இருந்தால், கடந்த சில மாதங்களாக பெற்ற நற்பெயரை பிடன் நிர்வாகம் இழந்துவிடும்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க இந்தியரும், பிடன் பிரச்சாரக் குழுவில் இருந்த சோனல் ஷா ட்விட்டரில் கூறுகையில் “ இந்தியாவில் கரோனா பிரச்சினை இருப்பது உண்மைதான், மிகப்பெரிய மனிதநேயபிரச்சினையாக மாற உள்ளது. அதற்குள் அமெரிக்க அரசுஏதாவது செய்ய வேண்டும், மற்ற நாடுகளுக்கும் இது பரவிவிடும்.”எனத் தெரிவி்த்தார்
அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஆஷிஸ் கே ஜா , தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரையில் “ இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸ் அந்நாட்டின் சுகாதாரத்துறையே உருக்குலைத்துவிடும். உடனடியாக அமெரி்க்கா உதவ வேண்டும்.
உலகின் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்கா உடனடியாக இந்தியாவுக்கு உதவ வேண்டும். தேங்கிக்கிடக்கும் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் வழங்க வேண்டும்”எனத் தெரிவி்த்தார்.
சர்வதேச நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் கூறுகையில் “ இந்தியாவில் நிலவும் சூழலைப் பார்த்து ஆழ்ந்த வேதனையடைந்துள்ளேன். இந்தியாவில் உள்ள சூழல் வருத்தமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.