

சீக்கிய ராணுவ வீரர் டர்பன் அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் அமெரிக்க ராணுவம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது.
கேப்டன் சிம்ரத்பால் சிங் ராணு வத்தில் சேர்ந்ததும் தனது முடியை வெட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. அமெரிக்க ராணுவத்தில் நீண்ட முடி, தாடி வைத்துக் கொள்ள அனுமதியில்லை.
இந்நிலையில் தற்போது சிம்ரத்பால் சிங் பணியில் இருக்கும் போது டர்பன் அணியவும், தாடி வைத்துக் கொள்ளவும் அமெரிக்க ராணுவம் அனுமதி அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் சாலை களில் வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகளை அகற்றும் படைப் பிரிவை சிம்ரத்பால் வழிநடத்தி னார். அதற்காக வெண்கல நட்சத் திரம் அளித்து கவுரவிக்கப் பட்டுள்ளார்.
தற்போது டர்பன் அணிய அனுமதிக்கப்பட்டிருப்பது சிம்ரத்பால் சிங்குக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறும்போது, “இது அற்புதமான தருணம். இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். வீட்டில் மட்டும் தான் டர்பன் அணிய முடியும். என் இரட்டை வாழ்க்கை தற்போது ஒன்றாக இணைந்து விட்டது. உண்மையான சீக்கியர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியாதவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார். இதனை ராணுவத்தில் என்னால் பார்க்க முடிந்தது.
தற்போது தற்காலிகமாகவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிரந்தர ஒப்புதல் வழங்காவிட்டால் வழக்கு தொடர தயாராக இருப்பதாக சிம்ரத்பால் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மேஜர் கமல்ஜீத் சிங் கல்சி கடந்த 2009-ம் ஆண்டு தாடி வைத்துக் கொள்ள அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.