Published : 24 Apr 2021 08:32 AM
Last Updated : 24 Apr 2021 08:32 AM

இந்தியாவை உலுக்கும் கரோனா பாதிப்பு; உதவத் தயார்: பிரிட்டன் அறிவிப்பு

லண்டன்

கரோனா தொற்றால் மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு காப்பாற்ற முடியாமல் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இதைச் சரி செய்ய மத்திய அரசும் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது. விமானங்கள் மூலம் ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை அனுப்பி வருகிறது,ரயில்கள் மூலம் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதுபோலவே தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், இனிமேல் வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.

இதுமட்டுமின்றி கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ரெம்டெசிவர் உட்பட பல மருந்துகள் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசியின் தேவையை திடீரென அதிகமாக்கியுள்ளது.

தற்போதை கோவிட் அதிகரிப்பு சூழலை கருத்தில் கொண்டு, இந்தியாவில் கோவிட் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவர் ஊசி மற்றும் ரெம்டெசிவர் ஆக்டிவ் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தநிலையில் கரோனா தொற்று காரணமாக மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் ராய்ட்டர் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில் ‘‘கரோனா பெருந்தொற்று பாதிப்பால் இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அந்நாட்டிற்கு எந்த வகையில் உதவலாம் என ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x