மியான்மரில் லட்சக்கணக்கான மக்கள் பசிக்குத் தள்ளப்படுவர்: ஐ.நா.

மியான்மரில் லட்சக்கணக்கான மக்கள் பசிக்குத் தள்ளப்படுவர்: ஐ.நா.
Updated on
1 min read

மியான்மரில் இன்னும் சில மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் பசிக்குத் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், “ராணுவ ஆட்சி மற்றும் நிதி நெருக்கடியை அடுத்து மியான்மரில் உணவுப் பாதுகாப்பின்மை கடுமையாக அதிகரித்து வருகிறது. வரவிருக்கும் மாதங்களில் லட்சக்கணக்கான மக்கள் உணவுப் பஞ்சத்தால் தவிப்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள வேலையை இழக்கப் போகிறார்கள். வறுமை நிலையில் உள்ள மக்கள் மேலும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் ராணுவம் வன்முறை

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.

இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மேலும், ஆங் சான் சூச்சி மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது. மியான்மர் நாட்டில் தற்போது அந்நாட்டு ராணுவம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர் புகை குண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in