

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தும் பள்ளிக்கூடத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அரசு நேற்று மரண தண்டனையை நிறைவேற்றியது.
கடந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 151 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 134 பேர் சிறுவர்கள் ஆவர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மவுல்வி அப்துஸ் சலாம், ஹஸ்ரத் அலி, முஜிபூர் ரஹ்மான், சபீல் என்கிற யாஹ்யா ஆகிய தீவிரவாதிகள் பெஷாவரை அடுத்த கோஹாத் பகுதியில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட்டனர். தண்டனை நிறைவேற்றப்பட்டதை பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.
4 தீவிரவாதிகளும் அனுப்பி இருந்த கருணை மனுவை அதிபர் மம்னூன் ஹுசைன் கடந்த மாதம் நிராகரித்தார். இதையடுத்து தூக்கு தண்டனைக்கான உத்தரவில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் கையெழுத்திட்டார்.
பெஷாவர் தாக்குதல் சம்பவம் நடந்ததையடுத்து அது பற்றி விரைவாக விசாரிப்பதற்காக ராணுவ சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில் 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இந்த கொடிய தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்..
.அதன் முதலாண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதல் ஈவிரக்கமற்ற மிக கொடூரமான தாக்குதலாக கருதப்படுகிறது. இந்த தா்க்குதலுக்குப்பிறகு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை பாகிஸ்தான் நீக்கியது. இதுவரை 300 மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.