முதல் காலாண்டில் 18.3% பொருளாதார வளர்ச்சியை எட்டி சீனா சாதனை

முதல் காலாண்டில் 18.3% பொருளாதார வளர்ச்சியை எட்டி சீனா சாதனை
Updated on
1 min read

கரோனா நெருக்கடியால் ஏற்பட்ட தொய்வுக்குப் பிறகு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் மிக விரைவான வளர்ச்சியை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய புள்ளிவிவர செய்தித் தொடர்பாளர் லியு ஹைஹுவா கூறும்போது, “நாட்டின் பொருளாதாரம் நல்ல தொடக்கத்தைக் கண்டுள்ளது. இந்த ஆண்டும் வேலை செய்யும் நாட்கள் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். மேலும், கரோனா காரணமாக கடந்த ஆண்டு தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தனர்.

இந்த ஆண்டு கரோனா தாக்கம் குறைந்ததன் காரணமாக தொழிலாளர்கள் அவர்கள் தங்கி இருந்த இடத்திலேயே தங்கி, தொழில்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டனர். இதன் காரணமாக முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 18.3% அதிகரித்துள்ளது. கரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி இதுவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் முதலில் ஏற்பட்ட நாடாக சீனா அறியப்படுகிறது. சீனாவின் வூஹான் நகரில் கரோனா பரவல் தொடங்கியபோது அந்நகரில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முற்றிலுமாக கரோனா பாதிப்பை சீனா கட்டுப்படுத்தியது.

உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in