

பிரிட்டனில் உலகின் மிகப்பெரிய முயலை திருடியவனை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்த முயலை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார் அதன் உரிமையாளர்.
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் நகருக்கு அருகே உள்ள ஸ்டூல்டன் கிராமத்தைச் சேர்ந்த அன்னெட் எட்வர்ட்ஸ் ‘டாரியஸ்’ என்ற முயலை வளர்த்து வந்தார். பழுப்பு-வெள்ளை நிறம், 129 செ.மீ.நீளம் கொண்ட இதற்கு உலகிலேயே மிகப்பெரிய முயல் என கின்னஸ் உலக சாதனை அமைப்பு 2010-ல் அங்கீகாரம் வழங்கியது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு தனது தோட்டத்தில் இருந்த முயல் காணாமல் போய்விட்டது என எட்வர்ட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்நாள் மிகவும்வருத்தமான நாள் என குறிப்பிட்டுள்ள அவர், டாரியஸை கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.1 லட்சம்பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். டாரியஸை என்னிடம் திருப்பி ஒப்படைத்து விடுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே, எட்வர்ட்ஸ் அளித்த புகாரின் பேரில் டாரியஸை வெஸ்ட் மெர்சியா போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.