Published : 13 Apr 2021 12:31 PM
Last Updated : 13 Apr 2021 12:31 PM

இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: அதன் பண்புகள், பயன்பாடுகள் என்ன?

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர காலத்துக்குப் பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 3-வது கரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி பயன்பாட்டுக்கு வருகிறது.

ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 10 கோடி எண்ணிக்கையில் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. கரோனா வைரஸுக்கு எதிராக முதலில் பயன்பாட்டுக்கு வந்த ஸ்புட்னிக் தடுப்பூசியின் பண்புகள், பயன்கள் என்ன என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை உருவாக்கிவர்கள் யார்?

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து, பயன்பாட்டுக்காக அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டது. கரோனா வைரஸுக்கு எதிராக முதலில் பயன்பாட்டுக்கு வந்த தடுப்பூசி இதுவாகும். ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை 2-8 டிகிரி செல்சியஸில் சேமிக்கப்பட வேண்டும். எனவே நாம் பயன்படுத்தும் சாதாரண குளிர்சாதனப் பெட்டிகளிலே இதனைச் சேமித்து வைக்க முடியும்.

மற்ற தடுப்பூசிகளிடமிருந்து ஸ்புட்னிக்-வி எவ்வாறு வேறுபடுகிறது?

ஸ்புட்னிக்-வி என்பது அடினோ வைரஸின் மாற்றி அமைக்கப்பட்ட மரபணுவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி. இந்த வகையான தடுப்பூசி, கரோனா வைரஸ் மரபணுக்களை எடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்ட வைரஸ்களை தாங்கிச் செல்கிறது. சில மரபணு மாற்றியமைக்கப்பட்ட தடுப்பூசிகள் செல்களில் புகுந்து, அதன்பின் ஸ்பைக் புரோட்டீனை உருவாக்குகிறது. சில தடுப்பூசிகள் கரோனா வைரஸ் மேல்புறத்தில் இருக்கும் ஸ்பைக் புரோட்டீன்களை மெதுவாக உருவாக்குகின்றன. இவைதான் வேறுபாடு.

எத்தனை டோஸ்கள்?

கோவாக்சின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளைப் போன்று ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் இரண்டு டோஸ்களைக் கொண்டுள்ளது. முதல் டோஸ் எடுத்துக் கொண்ட 21 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்புட்னிக்-வி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

91.5% சதவீதம் பயனளிக்கக் கூடியதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உள்ளது. மாடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசிகளுக்குப் பிறகு ஸ்புட்னிக்-வி தான் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் அதிக பயனைத் தருகின்றது.

0.1 % பக்கவிளைவுகள் மட்டுமே மட்டுமே ஸ்புட்னிக் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை?

ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை 750 ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த நாடுகளில் ஸ்புட்னிக் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது?

அர்ஜென்டினா, பஹ்ரைன், எகிப்து, ஹங்கேரி, அமீரகம், ஜோர்டான், மொரீஷியஸ், மொராக்கோ, பனாமா, பிலிப்பைன்ஸ், இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த 60-வது நாடு இந்தியா ஆகும். இந்தியாவில் ஏப்ரல் இறுதியில் அல்லது மே தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x