Published : 12 Apr 2021 04:36 PM
Last Updated : 12 Apr 2021 04:36 PM

கரோனா நெருக்கடி: பிரேசிலில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பட்டினியால் தவிப்பு

பிரேசிலில் கரோனா நெருக்கடி நிலவி வரும் நிலையில், அங்கு 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பட்டினியில் தவித்து வருகின்றனர்.

உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கரோனா காரணமாக பிரேசிலில் வறுமை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பிரேசிலில் அதிகரித்து வரும் கரோனா பரவல் 1.5 கோடிக்கும் அதிகமான மக்களைக் கடும் பட்டினியில் தள்ளியுள்ளது. மேலும், பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பிரேசிலின் மக்கள்தொகையில் மீதமுள்ள மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை நோக்கிச் சென்று கொண்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.

கரோனா காரணமாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் நாட்டில் தொடர்ந்து வேலையின்மை அதிகரித்து வருவதாகவும், அடிப்படை உணவுகள் கூட விலை ஏற்றத்தைக் கண்டுள்ளன என்றும் பிரேசில் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 90% படுக்கைகள் நிரம்பிவிட்டதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா தொடர்ந்து சுகாதார அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்.

பிரேசிலில் இதுவரை 8% மக்களுக்குத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை 1.3 கோடி மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1.1 கோடி மக்கள் குணமடைந்த நிலையில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x