Published : 12 Apr 2021 01:47 PM
Last Updated : 12 Apr 2021 01:47 PM

ஐக்கிய அமீரகத்தில் முதல் விண்வெளி வீராங்கனை தேர்வு

விண்வெளிக்கு அனுப்பத் தங்களது நாட்டைச் சேர்ந்த முதல் விண்வெளி வீராங்கனையை ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகம், விண்வெளி ஆராய்ச்சியில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. அந்த வகையில் தங்கள் நாட்டின் முதல் விண்வெளி வீராங்கனையை உலக நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் அரசு வெளியிட்ட அறிக்கையில், “27 வயதான நோரா அல் மத்ருஷி என்ற வீராங்கனை, ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட இருக்கிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளார். விரைவில் நாசாவில் நடக்கவிருக்கும் பயிற்சி வகுப்பில் இவர் கலந்துகொள்ள இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம், முதல் முறையாக செவ்வாய் கிரகத்துக்கு 'நம்பிக்கை' விண்கலத்தை அனுப்பி கடந்த ஆண்டு சாதனை புரிந்தது. ஜப்பான் நாட்டிலிருந்து இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம் இதற்கு முன் 2009, 2013-ம் ஆண்டுகளில் தென் கொரியாவுடன் இணைந்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பியிருந்தாலும், 2014-ம் ஆண்டுதான் சொந்தமாக விண்வெளி மையத்தை அமைத்தது. ஆனால், அடுத்த 6 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் உள்ள ஒரு சிறிய நாடு, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியது இதுவே முதல் முறை என்று பாராட்டப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம் தங்களது பொருளாதாரத்திற்கு எண்ணெய் வளத்தை நம்பி இருப்பதை சமீப ஆண்டுகளாகக் குறைத்துள்ளது. இதன் காரணமாக அறிவியல் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x