

பிரதமர் நரேந்திர மோடியின் லாகூர் பயணத்துக்கு பாகிஸ்தான் முக்கிய எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடி நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பும் வழியில் திடீர் பயணமாக பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்றார். அங்கு 2 மணி நேரம் தங்கிய அவர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் பேச்சு நடத்தினார்.
இந்நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சையது குர்ஷித் ஷா கூறும்போது, “பிரதமர் மோடியின் பயணத்தை எங்களின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) வரவேற்கிறது” என்றார்.
பி.பி.பி. தலைவர் பிலாவல் புட்டோ தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தான் வரும் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். இரு நாடுகள் இடையிலான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தொடர் பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே வழியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் தலைவர் இம்ரான் கானும் பிரதமர் மோடியின் பய ணத்தை வரவேற்றுள்ளார். இரு நாடுகள் இடையிலான உறவை மேம்படுத்த இப்பயணம் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறு ம்போது, “இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன் மைக்கு இப்பயணம் உதவும். காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இதுபோன்ற தொடர்புகள் தொடரவேண்டும்” என்றார்.
அவாமி தேசிய கட்சியின் தலைவர் ஜாகித் கான் கூறும் போது, “பிரதமர் மோடியின் பயணம், இந்தியா பாகிஸ்தான் உறவில் புதிய தொடக்கமாக இருக்கும்” என்றார்.
பிரதமரின் பாகிஸ்தான் பயணத் துக்கு பரந்த வரவேற்பு இருந் தாலும் எதிர்ப்பு குரலும் தனித்து ஒலிக்கச் செய்தது. வலதுசாரி ஜமாத் இ இஸ்லாமி தலைவர் சிராஜுல் ஹக் கூறும்போது, “பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானில் வரவேற்பு அளித்தது துரதிருஷ்ட வசமானது” என்றார்.