

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அரசுடன் அந்நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாகப் பெரும் சவாலாக இருக்கும் கரோனா தொற்றைச் சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக வழங்கப்படக் கூடிய தடுப்பூசிகள். முதல் டோஸ் செலுத்தி, 4 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த வேண்டும்.
உலக அளவில் பயன்பாட்டில் இருக்கும் ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக்-5 போன்ற இன்னும் பல தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளே. இதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ளது மட்டும் ஒரு டோஸ் கரோனா தடுப்பூசி ஆகும். இந்தத் தடுப்பூசிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.
இந்த நிலையில் தங்களது தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிப்பதற்கான முயற்சியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இறங்கியுள்ளது. இதுகுறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தரப்பில், “நாங்கள் இந்திய அரசுடன் எங்கள் தடுப்பூசியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் முயற்சிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுளோம். உலகம் முழுவதும் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கரோனா தடுப்பூசியைக் கொண்டுவருவதில் நாங்கள் முழுமையாக கவனம் செலுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனையில் கரோனா தடுப்பில் 85.9% பலனளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி மருத்துவப் பரிசோதனை இந்தியாவில் பயனளித்தால், இந்தியாவின் மக்கள்தொகைக்கு அந்நிறுவனத்தின் ஒரு டோஸ் தடுப்பூசி ஏற்றதாக அமையும்.