Published : 26 Dec 2015 09:55 AM
Last Updated : 26 Dec 2015 09:55 AM

உலக மசாலா: பறவை இயந்திரம்

பறக்க விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. ஒரு பறவை போல பறந்து சென்று, அந்த அனுபவங்களைப் பெற ஆர்வம் உள்ளவர்களுக்காகப் பறவை இயந்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்து கலைஞரும் சாஃப்ட்வேர் நிபுணருமான மாக்ஸ் ரெனெர் இந்தப் பறவை இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார். “இந்த இயந்திரத்தில் அமர்வதற்குப் பயிற்சி எதுவும் தேவை இல்லை. கைகள் இரண்டையும் இறக்கை போன்ற தகடுகளில் பொருத்திக்கொள்ள வேண்டும்.

தலைக்கு ஸ்பெஷல் கண்ணாடியுடன் கூடிய ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டும். கைகள், கால்கள், தலையை இப்படியும் அப்படியும் அசைத்துக்கொள்ளலாம். ஸ்பெஷல் கண்ணாடி வழியே அமெரிக்காவின் முக்கியப் பகுதிகள் தெரிய ஆரம்பிக்கும். காற்றைக் கிழித்துக்கொண்டு பறப்பதுபோல செயற்கையாகக் காற்றைச் செலுத்துவோம். கடல் பகுதிக்கு மேலே செல்லும்போது காற்றில் உப்பு இருக்கும். தொழிற்சாலைப் பகுதிகளுக்குச் செல்லும்போது ரசாயன வாசனை வரும். இயந்திரத்தில் அமர்ந்த சில நிமிடங்களிலேயே ஒரு பறவையாக உணர ஆரம்பித்துவிடுவீர்கள். அற்புதமான அனுபவங்களைப் பெறுவீர்கள்“ என்கிறார் மாக்ஸ்.

ஜுரிச் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு சிறிய மாணவர் குழுவை வைத்துதான் இந்த இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறார் மாக்ஸ். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குவதற்கான ஓர் இயந்திரம்தான். ஆனால் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க நாங்கள் உத்திரவாதம் என்கிறார் மாக்ஸ். பறந்து பார்த்த ஒருவர், இது தன் வாழ்நாள் அனுபவம் என்று மெய்சிலிர்க்கிறார்.

ம்… வித்தியாசமான முயற்சி!

பெரு நாட்டின் தலைநகரில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்தான் சாண்டா க்ளாஸ் வேடம் போட்டுக்கொள்கிறார்கள். தங்கள் மனைவியுடன் இரு சக்கர வாகனங்களில் வீதி வீதியாகப் பயணிக்கிறார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துகளுடன் போக்குவரத்து விதிகளைச் சொல்லி விழிப்புணர்வு ஊட்டுகிறார்கள். அதிக வேகம் கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது, சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்று அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

‘’கடந்த 16 ஆண்டுகளாக காவலர்கள் சாண்டாக்களாக மாறிவிடுகிறோம். எங்களிடம் பரிசுப் பொருட்கள் கிடையாது. சமூகத்துக்குத் தேவையான கருத்துகளைச் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இப்படிக் குடும்பத்துடன் சென்று சமூகத்துக்குத் தேவையான கருத்துகளைப் பரப்புவதில் எங்களுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது’’ என்கிறார் மார்கோ அன்டோனியோ சிரா என்ற காவல்துறை அதிகாரி.

காவல்துறை எங்கள் நண்பன் என்று உங்களை சொல்லலாம்!

ஒவாகுடானி என்பது ஜப்பானில் உள்ள மிகப் பெரிய வெப்பநீர் பள்ளத்தாக்கு. ஹகோன் மலையில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை வெடித்தது. சக்தி வாய்ந்த எரிமலை. இன்றும்கூட எரிமலையின் சில பகுதிகளில் இருந்து குழம்பு வெளியேறுகிறது. சில பகுதிகளில் ஆவி பறக்கும் அளவுக்கு கொதிக்கும் நீர் உருவாகிறது. இந்த நீரில் சல்பர் டையாக்ஸைடும் ஹைட்ரஜன் சல்பைடும் அதிக அளவில் இருக்கின்றன. இங்கே கிடைக்கும் கறுப்பு முட்டையைச் சுவைப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

‘குரோ-டமகோ’ என்று அழைக்கப்படும் இந்த மந்திர முட்டை ஒன்றைச் சாப்பிட்டால், மனிதனின் வாழ்நாளில் 7 ஆண்டுகள் கூடும் என்பது நம்பிக்கை. கறுப்பு முட்டைகள் இயற்கையில் உருவானவை அல்ல. சாதாரண கோழி முட்டைகள்தான் இப்படி மாற்றம் அடைகின்றன. பெரிய உலோகக் கூண்டுகளில் நூற்றுக்கணக்கான முட்டைகளை வைத்து, கொதிக்கும் நீருக்குள் வைத்துவிடுகிறார்கள். ஒரு மணி நேரம் கழித்து எடுக்கும்போது முட்டை ஓடுகள் கறுப்பாக மாறிவிடுகின்றன. பிறகு 15 நிமிடங்கள் சாதாரண நீரில் வேக வைக்கிறார்கள்.

அடுத்து விற்பனைக்கு எடுத்து வருகிறார்கள். முட்டை ஓடுதான் கறுப்பாக இருக்குமே தவிர, உள்ளே வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் அப்படியேதான் இருக்கும். சல்பர் அதிகம் உள்ள கொதிநீரில் முட்டையின் ஓடுகள் கறுப்பாக மாறிவிடுகின்றன. 5 முட்டைகள் கொண்ட ஒரு பை 275 ரூபாய். ஒருவர் 5 முட்டைகள் சாப்பிட்டால் 35 ஆண்டுகள் வாழ்நாள் அதிகரிக்கும் என்று வாங்கிச் செல்கிறார்கள்.

அறிவியல் தெரிந்தவர்தான் இந்த ஐடியாவை உருவாக்கியிருப்பார்!



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x