Published : 08 Apr 2021 02:00 PM
Last Updated : 08 Apr 2021 02:00 PM

கரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டோர்: இஸ்ரேல் 70% - இந்தியா 5% 

உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை அதிக அளவில் செலுத்திய கொண்ட நாடுகளின் விவரத்தை காணலாம்,

இஸ்ரேல்:

இஸ்ரேல் அரசு கரோனா தடுப்பூசியை மக்களிடையே கொண்டு செல்வதில் வெற்றி அடைந்துள்ளது. அந்த நாட்டில் இதுவரை 70% பேருக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசியை தீவிரப்படுத்தியதன் காரணமாக இஸ்ரேலில் பிப்ரவரி மாதத்திலிருந்தே கரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் 350-க்கும் குறைவானவர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேலில் 8 லட்சத்துகும் அதிகமான நபர்கள் கரோவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் 4,000 பேர் மட்டுமே சிகிச்சை உள்ளனர். அதில் 294 பேர் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

பிரிட்டன்:

பிரிட்டனை பொறுத்தவரை அங்கு 46.58 சதவீதத்தினருக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதலே பிரிட்டனில் கரோனா தடுப்பூசியை செலுத்துவது தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

கரோனா தடுப்பூசியை செலுத்துதலை தீவிரபடுத்தியதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் கரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. பிரிட்டனில் கடந்த சிலவாரங்களாக 5,000-க்கும் குறைவானவர்களே கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஜனவரி மாதம் முதலே கரோனா தொற்று விகிதம் பிரிட்டனில் குறைந்துள்ளது.

பிரிட்டனில் 43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துவிட்டனர்.

சிலி:

தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் இதுவரை 37.20 % பேருக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சிலியில் நாள் ஒன்றுக்கு 6,000 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிலியில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுளனர். இதில் 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம்:

ஐக்கிய அமீரகத்தில் 35.19 % பேருக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.

அமெரிக்கா:

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த அமெரிக்காவில் இதுவரை 32.38 % மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.

ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் அமெரிக்காவில் கரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கரோனா தொற்று விகிதம் ஏற்ற, இறக்கத்தை கண்டுள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில்தான் கரோனா தடுப்பு மருந்து அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. கலிப்போர்னியாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

பஹ்ரைன்:

பஹ்ரைனில் 31.73 % பேருக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. பஹ்ரைனில் கடந்த சில வாரங்களாக 1,500க்கும் குறைவானவர்களே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 7,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியா

இந்தியா சுமார் 6 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஏப்ரல் 7 -ம் தேதி நிலவரப்படி 5.50% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் 1.2 கோடிக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 1.1 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 4.97 % மக்கள் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x