

உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தி வாழ்ந்துவரும் வடகொரியா, தங்கள் நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை, யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தொடர்ந்து கூறிவருவது உலக சுகாதார அமைப்பையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் இருக்கும் தீவிரமான கம்யூனிஸ்ட் நாடு என்ற போர்வையில் சர்வாதிகார ஆட்சி செய்யும் தேசம் வடகொரியா. வடபகுதி எல்லையை சீனாவுடனும், ரஷ்யாவுடனும், தென்பகுதி எல்லையைத் தென் கொரியாவுடனும் பகிர்ந்து கொண்டுள்ளது வடகொரியா.
உலகில் கரோனா வைரஸ் பரவத் தொங்கிய கடந்த ஆண்டிலிருந்து தங்கள் நாட்டில் பரவல் இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறது. சீனாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கியவுடன், வடகொரியா தனது எல்லைகளை மூடியது. சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதித்தது. அரசு உயர் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. எல்லை கடந்து சென்று மீண்டும் நாட்டுக்கு வந்த தனது மக்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துக் கண்காணித்தது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்த வடகொரியாவில் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனாலும், தங்கள் நாட்டில் கரோனா வைரஸ் பரவல் இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தொடர்ந்து கூறி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், தி அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு வடகொரியா நிலை குறித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வடகொரியாவில் கரோனாவில் 23,121 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி அரசு குணப்படுத்தியது. கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 1-ம் தேதிவரை 732 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், எந்த முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது.
எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது. உண்மையில் கரோனாவில் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா அல்லது கரோனா இல்லாத நாடா என்பது வியப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கரோனா வைரஸ் பரவலில் இருந்து தங்கள் நாட்டு வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகுவதாக வடகொரியா கடந்த இரு நாட்களுக்கு முன் அறிவித்தது. இதுவரை வடகொரியா ஐ.நா.விடம் இருந்து 19 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பு சீனாவைத்தான் இரும்புத்திரை நாடு என்று சொல்வதுண்டு. இப்போது அந்த வரிசையில் வடகொரியாவும் இணைந்துவிட்டது. அங்கு நடக்கும் எந்த நிகழ்வும், உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்படுவதில்லை.