Published : 12 Nov 2015 09:19 AM
Last Updated : 12 Nov 2015 09:19 AM

மியான்மர் தேர்தலில் ஆங் சான் சூச்சி வெற்றி: தேசிய ஜனநாயக லீக் தொடர்ந்து முன்னிலை

மியான்மர் நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சான் சூச்சி வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது. இதுவரை வெளியாகி யுள்ள 182 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளில் 163 தொகுதிகளில் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கைப்பற்றியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் சுமார் 50 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் ராணுவ ஆதரவு பெற்ற ஐக்கிய ஒருமைப்பாடு மற்றும் மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி) ஆண்டு வருகிறது.

மியான்மர் நாடாளு மன்றத்துக்கான தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில், ராணுவ ஆட்சியில் 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி உள்ளது. இருப்பினும் முடிவுகள் அறிவிப்பதில் தாமதமாகி வருகிறது.

மொத்தம் 660 இடங்களில் உள்ள நாடாளுமன்றத்துக்கு 25 சதவீதம் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், புதன்கிழமை வரை அறிவிக்கப்பட்ட 182 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளில் 163 தொகுதிகளில் சூச்சியின் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூச்சி வெற்றி

யங்கூனில் உள்ள காவ்மு ஊரக தொகுதியில் போட்டியிட்ட சூச்சி வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவர் 54,676 வாக்குகள் பெற்றுள்ளார். இதனால், சூச்சி வெற்றி பெற்றாரா இல்லையா என நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகர் சூ மன் உட்பட ஆளும் கட்சியின் முக்கியமான தலைவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

சூச்சி வெற்றி பெற்றுள்ள போதும் அவர் அதிபராக முடியாது. அந்நாட்டு சட்டப்படி வெளிநாட்டவரைத் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிபராக முடியாது. சூச்சியின் கணவர் பிரிட்டனைச் சேர்ந்தவர். அவர் இறந்து விட்டார். சூச்சியின் இரு மகன்களும் பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளனர்.

அதிபராக முடியாவிட்டாலும், எனது நண்பரை அப்பதவியில் அமர்த்தி, அதிபருக்கும் மேலாக வழிநடத்துபவளாக இருப்பேன்” என சூச்சி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x