Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM

இந்தியா, ஐக்கிய அமீரகம், இஸ்ரேல் இடையே 2030-ல் முத்தரப்பு வர்த்தகம் ரூ.8 லட்சம் கோடியாக உயரும்

ஜெருசலேம்/துபாய்

இந்தியா, ஐக்கிய அமீரகம் மற்றும்இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு வர்த்தகம் 2030-ல் ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோ இஸ்ரேல் வர்த்தக சபையின் சர்வதேச கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் இந்நாடுகளுக்கிடையிலான வர்த்தக சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது துபாயின் இஸ்ரேஸ் மிஷனுக்குத் தலைமை வகிக்கும் தூதரக அதிகாரி ஸ்துல்மான் ஸ்டாரோஸ்டா கூறியதாவது, “இஸ்ரேலின் தொழில்நுட்பம், ஐக்கிய அமீரகத்தின் தொலைநோக்கு தலைமை மற்றும் இந்தியாவுடனான இந்த இரு நாடுகளின் உத்திசார்ந்தகூட்டு ஆகியவற்றின் மூலம் இந்நாடுகளின் முத்தரப்பு வர்த்தகத்தை 2030-ல் ரூ.8 லட்சம் கோடியாக உயர்த்தலாம்” என்றார்.

இந்தியாவுக்கான ஐக்கிய அமீரக தூதர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல்பான்னா கூறுகையில், “ஐக்கிய அமீரகம், இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகளின் வலுவான அம்சங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க முடியும்” என்றார்.

இந்தோ இஸ்ரேல் வர்த்தகசபையின் சர்வதேச கூட்டமைப்பின் கவுரவ தலைவர் கமல் வச்சானி பேசுகையில், இந்த மூன்று நாடுகளின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அம்சங்கள் உருவாக்கும் வர்த்தக வாய்ப்புகள் எண்ணற்றவை என்றார்.

இந்நாடுகளின் முத்தரப்பு வர்த்தக நடவடிக்கைகளைத் திட்டமிடும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்க உள்ளதாக வர்த்தக கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x