

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 82 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தரப்பில், “ ஆப்கானிஸ்தானில் அர்கன்தப் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட சண்டையில் 82 தலிபான்கள் கொல்லப்பட்டனர். தலிபான்களின் முக்கிய தளபதி சர்ஹாதியும் இதில் கொல்லப்பட்டார். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது” என்றார்.
அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.