

மாலி தலைநகர் பமாகோவில் உள்ள நட்சத்திர ஓட்டல் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் அனிதா தாதர் (41) பலியானார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
பமாகோவில் உள்ள ரேடியன் புளூ நட்சத்திர ஓட்டலுக்குள் நேற்று முன்தினம் புகுந்த தீவிரவாதிகள் அங்கு தங்கியிருந்தவர்களை பிணைக்கைதியாகப் பிடித்தனர். ஓட்டல் ஊழியர்கள் உட்பட 170 பேரை அவர்கள் சிறைபிடித்தனர்.
அந்த ஓட்டலில் 20 இந்தியர்களும் தங்கியிருந்தனர். அவர்களை மாலி அதிரடிப் படை வீரர்களும் ஐ.நா. அமைதிப் படை வீரர்களும் பத்திரமாக மீட்டனர்.
தீவிரவாதிகளிடம் சிக்கிய 170 பேரை மீட்க அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் இருந்து அதிரடிப் படை வீரர்கள் பமாகோவுக்கு சென்றனர். அவர்களின் தலைமை யில் சுமார் 7 மணி நேர போராட் டத்துக்குப் பிறகு அனைத்து பிணைக்கைதிகளும் விடுவிக்கப் பட்டனர். அப்போது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் 27 பேர் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்திய பெண் பலி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் அனிதா தாதர் (41) என்பவரும் தாக்குதலில் உயிரிழந்தார். தொண்டு நிறுவனம் சார்பில் மாலி நாட்டில் அவர் சுகாதார ஊழியராகப் பணியாற்றி வந்தார். அமெரிக்காவின் மேரி லேண்ட் பகுதியைச் சேர்ந்த அவ ருக்கு ஆரம்ப கல்வி பயிலும் ரோஹன் என்ற மகன் உள்ளார். அனிதாவின் மரணத்துக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள் ளார்.
10 நாட்கள் அவசரநிலை
மாலியில் 10 நாட்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டுள்ளது. தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 27 பேருக்காக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன், சீன அரசு உட்பட பல்வேறு தரப்பினர் தாக்குதல் சம்பவத்தை கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
ஓட்டல் தாக்குதலுக்கு அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-மவுராபிட்டன் பொறுப்பேற்றிருக்கிறது. அந்த அமைப்பின் தலைவர் மோதர் என்பவரை மாலி அரசு தீவிரமாக தேடி வருகிறது. அல்ஜீரியாவை பூர்வீகமாக கொண்ட அவர் மாலியில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர் ஆவார்.