

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் மிருகத்தனமான பலாத்கார கொடூரங்களில், குற்றவாளிகளுக்கு எந்த பாரபட்சமும் இன்றி தண்டனை அளிக்க வேண்டுமென உத்தரபிரதேச சிறுமிகள் பலாத்கார சம்பவத்தை குறிப்பிட்டு யுனிசெப் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (யுனிசெப் ), "பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலாத்காரம் செய்யும் கொடூர சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இவை வார்த்தையால் வர்ணிக்க முடியாத குற்றங்களாக இருக்கின்றன. பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் வெளிவருவதே இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் சிறுமிகள் இருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அவர்களை உயிருடன் மரத்தில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம், மிகவும் மோசமான போக்கினை காண்பிக்கின்றது. இது போன்ற மிருகத்தனமான பாலியல் வன்முறைகள் கண்டிக்கத்தக்கது.
இந்த வேலைகளில் ஈடுப்படும் குற்றவாளிகளை எந்த விதமான பாரபட்சமும் இன்றி தண்டிக்க வேண்டும்.
இது போன்ற வழக்குகளில், நியாயப்படுத்துவது, குற்றங்களுக்கு காரணம் கூறுவது என எல்லா விதமான கூற்றுகளையும் நியாயப்படுத்துவதை சட்டம் அனுமதிக்க கூடாது. இது போன்ற சம்பவங்கள் சிறுமிகள், இளம் பெண்கள், சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் என அனைவரையும் பாதிக்கின்றது.
இவை அனைத்தும் மனித இனத்திற்கு எதிரான கொடூரங்களாக பார்க்கப்படுகின்றன. இவை முற்றிலும் மனித உரிமை மீறல்கள்.
உலகில் உள்ள அனைத்து குழந்தைகளையும் நாம் காக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். சிறுவர்களை நாம் பாதுகாப்பும் கண்ணியமிக்கவர்களாக வளர்க்க வேண்டும்" என யுனிசெப் தெரிவித்துள்ளது.