

பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசினார்.
கருத்தரங்க மையத்தில் ஷெரீபை சந்தித்த மோடி அவருடன் கைகுலுக்கினார். பிறகு, அங்கிருந்த சோபாவில் அமர்ந்து இருவரும் இயல்பாக பேசிக்கொண்டிருந்தனர்.
இருவரும் கைகுலுக்கிய படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், நவாஸை சந்தித்தார் மோடி என பதிவிட்டுள்ளார்.
இது திட்டமிடப்படாத சந்திப்பு என்பதால், இதுதொடர்பான வேறு அதிகாரப்பூர்வ தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.
மோடியும் ஷெரீபும் ஒன்றாக அமர்ந்துள்ள வீடியோ பதிவை ஒளிபரப்பிய பாகிஸ்தான் டிவி, இணக்கமான சூழல் நிலவியதாகவும், நேர்மறையான, மகிழ்ச்சியான நிகழ்வு எனவும் தெரிவித்துள்ளது.