

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இஸ்லாமிக் ஸ்டேட் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு 130-க்கும் மேற்பட்டோர் பலியானதையடுத்து, சிரியா தலைநகரில் ஐ.எஸ். தலைமைச் செயலகம் மீது பிரான்ஸ் மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
10 போர் விமானங்கள் உட்பட 12 விமானங்கள் சுமார் 20 குண்டுகளை ஐ.எஸ். தலைமைச்செயலகக் கட்டிடத்தின் மீது இறக்கியது.
துருக்கியில் ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரண்ட் ஃபேபியஸ் கூறும்போது, “சிரியாவில் போர் தொடுப்பது நியாயமே. நாங்கள் ஏற்கெனவே கடந்த காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டோம், இந்நிலையில் ஞாயிறன்று ரக்காவில் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளோம்.
பாரீஸில் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவர். இவ்வளவு தீவிரமாக தாக்குதலை அவர்கள் நடத்தும் போது நாம் சும்மாயிருப்பது சரியாகாது” என்றார்.
பாரீஸில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்’ உறுப்பினர்கள் 7 பேரை கைது செய்ததாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் தொடர்புடைய 26 வயது தீவிரவாதி சலா அப்தேஸ்லாம் மீது விடுக்கப்பட்டுள்ள கைது உத்தரவில் இவர் மிகவும் அபாயகரமானவர் என்று கூறப்பட்டுள்ளது.
சனியன்று பெல்ஜியம் எல்லை அருகே சந்தேகத்துக்குரிய காரை போலீஸார் நிறுத்திய போது அதில் அப்தேஸ்லாம் இருந்துள்ளார். ஆனால் அதன் பிறகே தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட வோல்க்ஸ்வேகன் போலோ கார் தீவிரவாத அப்தேஸ்லாம் அதனை வாடகைக்கு விட்டது தெரியவந்தது.
வியாழனன்றே எச்சரிக்கை:
பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்கு வியாழக்கிழமையே தாக்குதல் குறித்து அறிவுறுத்தப்பட்டதாக இராக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராக் மற்றும் சிரியாவில் தங்களுக்கு எதிராக சண்டையிடும் கூட்டணிப் படை நாடுகளின் உள்ளே குண்டு வீச்சு தாக்குதல் நடத்தவும், பிணைக்கைதிகளை பிடிக்கவும் ஐஎஸ் தலைவர் பக்தாதி உத்தரவிட்டதாக இராக் உளவுத்துறை எச்சரிக்கை அளித்திருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.
ஆனால் இத்தகைய எச்சரிக்கைகள் ‘எப்போதும்’ ‘ஒவ்வொரு நாளும்’ தங்களுக்கு வந்தபடியேதான் இருக்கின்றன என்று பிரான்ஸ் உளவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 சகோதரர்களில் ஒருவராக அப்தேஸ்லாம் கருதப்படுகிறார். இவருடன் பெல்ஜியம் எல்லையைக் கடந்த ஒருவர் பிற்பாடு கைது செய்யப்பட்டார். மற்றொருவர் பேட்டக்கிளான் தியேட்டரில் தற்கொலை செய்து கொண்டார்.
தாக்குதல் நடத்தியதோடு அல்லாமல் பாரீஸ் நகரை “ஆபாசமும் விலைமாதர்களும் நிறைந்த நகரம்” என்று வர்ணித்துள்ளது ஐ.எஸ்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரில் 3 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதே தற்போது பிரான்ஸுக்கு கவலையளிக்கும் விஷயமாகும்.
பிரான்ஸ் இன்னும் இந்தத் துயரத்திலிருந்தும் அச்சத்திலிரும்தும் விடுபடவில்லை என்று மக்கள் அங்கு பதற்றத்துடன் காணப்படுவதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.