Published : 31 Oct 2015 02:28 PM
Last Updated : 31 Oct 2015 02:28 PM

எகிப்தில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானத்தில் 224 பேர் பலி

ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். பொறுப்பேற்பு

எகிப்தின் சினாய் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் பலியானதாக, எகிப்திய பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளையில், ரஷ்ய விமானத்தை தாங்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

விமானத்தில் 214 ரஷ்ய பயணிகளும், 3 உக்ரைன் பயணிகளும், 7 விமான ஊழியர்களும் பயணித்தனர். தெற்கு சினாயில் ஷார்ம்-எல் ஷேய்க்கிலிருந்து ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் செல்வதற்காக புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட 23-வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. மேலும் ராடாரிலிருந்தும் மறைந்தது.

இதனையடுத்து சினாய் மலைப்பகுதியில் விமானம் மோதி சிதறியது தெரியவந்தது. விமானத்தின் பாகங்களும், மனித உடல்களும் 5 சதுர கிமீ பரப்பளவுக்கு சிதறிக் கிடந்தது என்று எகிப்திய பாதுகாப்பு மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

கெய்ரோவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவிக்கும் போது, “விமானத்தில் பயணம் செய்த அனைவரும் துரதிர்ஷ்டவசமாக பலியாகினர். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று கூறியுள்ளது.

இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக அனுப்பப்பட்டதாக எகிப்திய அரசு தெரிவித்துள்ளது.

விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை. எகிப்திய பிரதமர் இஸ்மாயில் ஷரீப் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் உடனடியாக மீட்புப் படையினரை எகிப்துக்கு அனுப்ப அதிபர் புடின் உத்தரவிட்டதாக கிரெம்ளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியான 217 பயணிகளில் 138 பெண்கள், 62 ஆண்கள், 17 குழந்தைகள் அடங்குவர் என்று எகிப்திய அமைச்சரவை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை தொடர்பை இழந்த போது விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாக எகிப்திய மூத்த விமான போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கின் புல்கோவோ விமான நிலையத்தில் தங்கள் உறவினர்களுக்காகக் காத்திருந்தவர்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

எல்லா ஸ்மிர்னோவா என்ற 25 வயது ரஷ்ய பெண் கூறும்போது, “நான் என் பெற்றொரின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். விமானத்தில் ஏறிய பிறகு அவர்களிடம் தொலைபேசியில் பேசினேன். அதன் பிறகுதான் இந்தத் துயரச் செய்தி” என்றார்.

எகிப்திய மூத்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறும்போது, “விமானி தனது கடைசி செய்தியில் தனது தொடர்பு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்” என்று கூறினார்.

ஐ.எஸ். பொறுப்பேற்பு

ரஷ்ய பயணிகள் விமானத்தை வீழ்த்தியதாக ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது. இந்த தீவிரவாத குழு வெளியிட்டுள்ள அறிக்கை அதன் ட்விட்டர் ஆதரவாளர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சினாய் மலைப்பகுதியில் மோதி விமானம் சிதறியதாக எகிப்திய பாதுகாப்பு அதிகாரிகள் முன்னதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் எழுந்துள்ளன.

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்பின் அரை அதிகாரபூர்வ செய்தி நிறுவனமாக செயலாற்றும் ஆமாக் என்ற இணையதளமும் இந்த ஐ.எஸ். பொறுப்பேற்புத் தகவலை பதிவு செய்துள்ளது.

ட்விட்டரில் இது குறித்து புழங்கி வரும் கூற்று வருமாறு: இஸ்லாமிக் ஸ்டேட் போராளிகள் ரஷ்ய விமானத்தை வீழ்த்த முடிந்துள்ளது. அனைவரும் பலியாகினர். கடவுளுக்கு நன்றி.

குவியும் இரங்கல்கள்:

ஏற்கெனவே எகிப்திய அரசு மற்றும் பிரான்ஸ் ஆகியவை இந்த விமான விபத்து குறித்து அதிர்ச்சி வெளியிட்டு, பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ள நிலையில்.

அமெரிக்க அமைச்சர் ஜான் கெரி "எங்களுக்கு விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால், தொடக்க செய்திகளை வைத்துப் பார்க்கும் போது பயங்கர துயரமும், அதனால் இழப்பும் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

முந்தைய செய்திப் பதிவுகள்:

விபத்துக்குள்ளான ஏர்பஸ் ஏ-321 (A-321) விமானம் கோகலிமாவியா ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது. அந்த விமானத்தின் பதிவு எண் கேஜிஎல்-9268 (KGL-9268).

விசாரணைக்கு உத்தரவு

ரஷ்ய விமானமான மெட்ரோஜெட் ஏர்பஸ் ஏ-321 என்ற விமானம் 224 பேர்களுடன் எகிப்தின் சினாய் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது குறித்த விசாரணையை தொடங்கியது ரஷ்ய விசாரணைக் கமிட்டி.

விமானம் ராடாரிலிருந்து மறைவதற்கு முன்னதாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரத் தரையிறக்கத்துக்கு விமானி கோரியதாகவும், ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் எகிப்திய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்ததாகவும் தெரிகிறது.

அதாவது அருகில் உள்ள விமான நிலையத்தில் அவசரத் தரையிறக்கும் வேண்டியுள்ளார் விமானி. ஆனால் முடிவெடுப்பதற்குள் கட்டுப்பாட்டு அறை தொடர்பிழக்கப்பட்டது.

இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதத்தை எதிர்த்து எகிப்திய படைகள் போரிடும் சினாய் பகுதியில் இந்த விமானத்தின் பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தெற்கு சினாயின் கடற்கரை நகரமான அல்-அரிஷ் என்ற நகருக்கு 35 கிமீ தொலைவில் ஹஸ்சானா என்ற இடத்தில் விமானம் நொறுங்கியது தெரியவந்துள்ள்து.

சம்பவ இடத்திற்குச் சென்ற எகிப்திய மீட்புப் படையினரின் பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவிக்கும் போது, "இப்போது நான் துயரமான காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். தரையில் நிறைய உடல்கள் கிடக்கின்றன. மேலும் பலர் இருக்கைகளிலேயே இறந்தபடி கிடக்கின்றனர்.

விமானம் இரண்டாக உடைந்தது. விமானத்தின் பின்பகுதியில் ஒரு சிறு பகுதி எரிந்து போக, விமானத்தின் பெரும்பகுதி பாறை ஒன்றில் மோதியது. இது வரை குறைந்தது 100 சடலங்களை மீட்டுள்ளோம் மீதமுள்ள சடலங்கள் விமானத்தில் உள்ளன” என்றார்.

முந்தைய செய்திப் பதிவு:

ரஷ்ய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

ரஷ்ய விமானம் சினாயின் மலைப்பகுதிகளில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டு வரும் நிலையில் அதன் பாகங்களை ராணுவ விமானங்கள் கண்டு பிடித்துள்ளதாக எகிப்து அரசு தெரிவித்துள்ளது.

224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தில் விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த 217 பயணிகள் உட்பட 224 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியவராத நிலையில் விபத்துப் பகுதிக்கு 45 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.

விரைவில் மீட்பு பணி நடைபெறும் என்று எகிப்து அரசு கூறியுள்ளது.

எகிப்து பிரதமர் உறுதி:

விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதை அந்நாட்டு பிரதமர் ஷரீப் இஸ்மாயில் அலுவலகம் உறுதி செய்துள்ளது.

பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில், "ரஷ்ய பயணிகள் விமானம் எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து விமான போக்குவரத்துத் துறை மூத்த அதிகாரி கூறும்போது, "விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தில் 217 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் என மொத்தம் 224 பேர் இருந்துள்ளனர். விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்தவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை" என்றார்.

எகிப்தில் ஷாம் அல் ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் செல்லும்போது விபத்து நடந்துள்ளது.

ரஷ்யா உறுதி:

இதற்கிடையில் தங்கள் நாட்டு விமானம் எகிப்தில் ஷாம் அல் ஷேக் நகரில் இருந்து புறப்பட்ட அடுத்த 25-வது நிமிடத்திலிருந்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகியதாக ரஷ்ய விமான போக்குவரத்து துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்டதா?

விமானம் நொறுங்கி விழுந்த சினாய் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. இருப்பினும், விமானத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினரா என்பதை இப்போதைக்கு உறுதி செய்ய முடியாது என எகிப்து பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x