

பாரீஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் 26/11 மும்பைத் தாக்குதல்களின் நினைவுகளை எழுப்பும் வேளையில், பாகிஸ்தானுடனனான அமெரிக்காவின் உறவுகள் இந்திய அரசின் விருப்பத்துக்கேற்ப அமையப்போவதில்லை என்ற எண்ணம் வலுத்து வருகிறது.
மும்பை தாக்குதலில் 6 அமெரிக்கர்களும் கூட பலியாயினர்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரஹீல் ஷரீப் அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாகச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது குழுவுடன் துணை அதிபர் ஜோசப் பைடன் உட்பட ஜான் கெரி மற்றும் சில அமெரிக்க அரசு உயர்பீடங்களைச் சந்தித்தார். பலருடனான இந்த உயர்மட்டச் சந்திப்பு 2 மணிநேரங்கள் நீடித்துள்ளன.
இதனையடுத்த அமெரிக்க செய்திகள் வலியுறுத்துவது என்னவெனில், ஐஎஸ் மற்றும் ஆப்கன் சூழ்நிலையை எதிர்கொள்ள பாகிஸ்தானுடனான உறவு அவசியம் என்பதையே.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்க செனேட் உறுப்பினரும், பயங்கரவாத துணைக்குழுவின் தலைமையுமான பிராட் ஷெர்மான், அமெரிக்க துணை அதிபர் பைடனுக்கு எழுதிய கடிதத்தில், “பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் உதவி தொடர வேண்டுமென்றால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க நல்லெண்ணத்துடன் முயற்சி செய்வது அவசியம் என்பதை நீங்கள் வருகை தரும் பாகிஸ்தான் ராணுவத் தளபதியிடம் அறிவுறுத்துவது அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தக் கடிதத்துடன் மும்பை-பாரீஸ் தாக்குதல் ஒற்றுமைகளை அலசும் நிபுணத்துவ கட்டுரை ஒன்றையும் இணைத்துள்ளார் இவர்.
இந்தக் கட்டுரையை எழுதியவர் முன்னால் சிஐஏ அதிகாரி புரூஸ் ரிடல். அவர் அதில், “பயங்கரமான பாரீஸ் தாக்குதல் அதற்கு முந்தைய மும்பை தாக்குதல் பாணியில் அமைந்துள்ளது. ஒரு சிறு மதவாதத் தற்கொலைப் படைக் கும்பல் ஒரு நகரத்தையே முடக்க முடியும் என்பதற்கு இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரு சிறந்த உதாரணம். மும்பைத் தாக்குதல் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யினால் ஆதரிக்கப்பட்டு உதவப்பட்டது. அல் கய்தா, லஷ்கர் அமைப்புகளின் தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பாதுகாப்புடன் சுதந்திரமாக திரிந்து வருகின்றனர்” என்று எச்சரித்திருந்தார்.
இந்த கூற்றுக்களைத் தாங்கிய கட்டுரையையே தற்போது அமெரிக்க துணை அதிபருக்கு பிராட் ஷெர்மான் இணைத்து அனுப்பியுள்ளார்.
ஆனாலும், அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜான் கர்பி, “பாகிஸ்தானுடனான உறவு முக்கியமானது. இது ஒரு சிக்கல் நிறைந்த உறவு. நாங்கள் இதனைத் தொடரவும் மேம்படுத்தவும் விரும்புகிறோம்” என்று கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.