

வங்கதேசத்துக்கு 2 நாட்கள் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஜெஸ்ஹோரேஸ்வரி காளி கோயிலில் இன்று வழிபாடு நடத்தினார்.
வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்குப் பிரதமர் மோடியை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசினா அழைத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்றுப் பிரதமர் மோடி நேற்று வங்கதேசம் சென்றார். முதல் நாளான நேற்று போர் வீரர்கள் நினைவிடம், பங்கபந்து அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றுக்குப் பிரதமர் மோடி சென்றார்.
இந்நிலையில் 2-நாளான இன்று வங்கதேசத்தின் தென்மேற்குப் பகுதியில் சக்திஹிரா மாவட்டத்தில் ஈஸ்வரிபூர் நகரில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான ஜெஸ்ஹோரேஸ்வரி காளி கோயிலுக்குப் பிரதமர் மோடி சென்றார்.
இந்துப் புராணங்கள் படி, 51 சக்தி பீடங்களில் ஜெஸ்ஹோரேஸ்வரி காளி கோயிலும் ஒன்றாகும். கடந்த 16-வது நூற்றாண்டில் வங்கதேசம் பகுதியில் ஆண்ட இந்து மன்னர் ஒருவரால் இந்தக் கோயில் எழுப்பப்பட்டது.
இந்தக் காளி கோயிலுக்கு இன்று காலை வந்த பிரதமர் மோடிக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளியால் உருவாக்கப்பட்ட, தங்க முலாம் பூசப்பட்ட கிரீடத்தை பிரதமர் மோடி காளி தேவிக்குச் சூட்டினார். கோயிலில் சிறிது நேரம் இருந்து பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். தரையில் அமர்ந்தவாறு தியானத்தில் மோடி ஈடுபட்டபோது, கோயிலின் அர்ச்சகர் வேத மந்திரங்களை ஓதினார்.
அதன்பின் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "ஜெஸ்ஹோரேஸ்வரி கோயிலில் வழிபாடு நடத்தியபின் ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன்" எனத் தெரிவித்தார்.
கோயிலில் வழிபாடு நடத்தியபின் வெளியே வந்த பிரதமர் மோடி, அங்கிருந்த நிருபர்களிடம் கூறுகையில், "கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மனிதர்களைக் காக்க வேண்டும் என்று காளியிடம் பிரார்த்தனை செய்தேன். ஏராளமான பக்தர்கள் எல்லை கடந்து வந்து வங்கதேசத்தில் உள்ள காளி கோயிலில் தரிசனம் செய்துவிட்டுச் செல்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு வரும் அனைத்துச் சமூகத்தினரும் தங்கும் வகையில் சமுதாயக் கூடம் அவசியம் தேவை. அவ்வாறு இருந்தால் அது பயனுள்ளதாக இருக்கும். இந்தக் கோயிலுக்குத் தேவையான பல்வேறு பயன்பாட்டுக்கு உகந்த வகையில் இருக்கும் சமுதாயக் கூடத்தை இந்தியா கட்டமைத்துக் கொடுக்கும்.
மதரீதியான நிகழ்ச்சிகள், கல்வி, சமூக நிகழ்ச்சிகள் அனைத்தும் பயன்படும் வகையில் அந்தக் கூடம் இருக்கும். குறிப்பாகப் புயல், மழைக் காலத்தில் மக்கள் தங்கிக் கொள்ளலாம். இதற்கான பணிகளை விரைவில் இந்தியா தொடங்கும். இங்கு வழிபாடு நடத்த வாய்ப்பளித்த வங்கதேச அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.