எகிப்தில் ரயில்கள் மோதி விபத்து: 32 பயணிகள் பலி
எகிப்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 32 பயணிகள் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து எகிப்து ரயில்வே துறை அமைச்சகம் தரப்பில், “எகிப்தின் தென் பகுதியில் உள்ள தக்தா மாவட்டத்தில் இரு பயணிகள் ரயில்கள் மோதிக் கொண்டதில் 32 பயணிகள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹலா சயீத் தெரிவித்துள்ளார்.
ரயில்வே தடங்கள் மோசமாக இருந்த காரணத்தால் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ரயில் விபத்தில் பலியான குடும்பத்திற்கு எகிப்து அதிபர்
அப்தெல் ஃபத்தா அல் சிசி நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், ரயில் விபத்தில் பலியான குடும்பத்திற்குத் தனது இரங்கலையும் அவர் பதிவு செய்துள்ளார்.
எகிப்தில் ரயில்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான ஒன்று. எகிப்தில் 2002ஆம் ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் 300 பேர் பலியாகினர். 2017ஆம் ஆண்டில் மட்டும் எகிப்தில் 1,793 ரயில் விபத்துகள் நடந்துள்ளன.
